தமிழ்நாடு - கேரள எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம்? - கோவை மாவட்ட எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு!
தமிழ்நாடு - கேரள எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து கோவை மாவட்ட எல்லையில் பாதுகாப்பு அதிகரித்துள்ளது.
கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாகவே மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, வனப்பகுதிகள் மற்றும் மாநில எல்லை சோதனை சாவடிகளில் கேரள மாநில காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் அய்யன்குளம் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக அம்மாநில நக்சல் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.
இந்த சண்டையில் மாவோயிஸ்ட்கள் இரண்டு பேர் காயமடைந்தனர். மேலும், 3 பேர் தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. தப்பிச் சென்றவர்கள் விட்டுச் சென்ற 3 துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, தமிழ்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் மாவோயிஸ்ட்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கிடையே மாவோயிஸ்ட்கள் தமிழகத்திற்குள் நுழையாமல் இருக்க கூடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் எல்லை மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், போலீசார் ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக - கேரள எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டத்தை தடுப்பதற்காக கோவை மாவட்ட எல்லையில் பாதுகாப்பு அதிகரித்துள்ளது. கோவை மாவட்டத்தில் 14 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 160 ஆயுதமேந்திய காவல்துறையினர் பாதுகாப்பில் இருப்பதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.
போலீசாருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் காயமடைந்தவர்கள் யாரேனும் மருத்துவ உதவிக்காக கோவை வரலாம் என்பதால் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவாமல் தடுக்க பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.