“தேர்தல் நேரத்தில் பலரும் பல கதைகள் கூறுவார்கள், அதை மக்கள் நம்பமாட்டார்கள்” - கனிமொழி எம்.பி பேச்சு!
“தேர்தல் நேரத்தில் பலரும் பல கதைகள் கூறுவார்கள், அதை மக்கள் நம்பமாட்டார்கள்” என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இலவச
வீட்டுமனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வீடு, நம்முடைய நிலம் என்பது எல்லோருக்கும் இருக்கும் கனவு. மக்களின் கனவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலவச வீட்டு மனை பட்டா வழங்கி நிறைவேற்றி தந்துள்ளார். குடிசை மாற்று வாரியம் திட்டத்தை கொண்டு வந்தது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான். அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பெண்களுக்கு திருமண உதவி திட்டம் தந்தார். அந்த திட்டத்தின் நீட்சியாக தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுமைப்பெண் திட்டம் கொண்டு வந்துள்ளார்.
பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு உள்ளது என்ற சட்டத்தை கொண்டு வந்தார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. மக்களின் கனவுகளை நிறைவேற்றும் அரசாக திமுக அரசு செயல்படுகிறது. கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியை மேம்படுத்தி வெளிநாடுகளில் விற்பனையை அதிகரிக்க வசதியாக கடலை மிட்டாய் மையம் அமைக்க சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு செய்துள்ளார். தேர்தல் நேரத்தில் பலரும் பல கதைகள் கூறுவார்கள். அதை மக்கள் நம்பமாட்டார்கள்” என தெரிவித்தார்.