‘பாடத்திட்டத்தில் இருந்து மனுஸ்மிருதி நீக்கப்படும்’ - டெல்லி பல்கலை.துணைவேந்தர் அறிவிப்பு!
மனுஸ்மிருதி பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படும் என டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகமாக விளங்கும் டெல்லி பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டப் படிப்புகளின் பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதியை சேர்ப்பதற்கான திட்டத்தை நிர்வாகம் நிராகரித்துள்ளது.
சட்டப்படிப்புகள் துறை சார்பாக பல்கலைக்கழகத்தின் முடிவெடுக்கும் குழுவுக்கு மனுஸ்மிருதி குறித்து ஜி.என்.ஜா மற்றும் டி. கிருஷ்ணசுவாமி ஐயர் ஆகியோர் எழுதிய விளக்க புத்தகங்களை இளங்கலை முதல் மற்றும் மூன்றாம் ஆண்டு பாடத்திட்டத்தில் சேர்க்கும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சர்ச்சையை கிளப்பிய இந்த முடிவுக்கு இடதுசாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பான SDTF ஆசிரியர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
பெண்களின் உரிமைகளுக்கு எதிராகவும், பட்டியலினத்தர்களுக்கு எதிராகவும் மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கும் மனுஸ்மிருதி, கல்வி முறையை சீர்குலைக்கும் என்று அவர்கள் பல்கலை நிர்வாகத்துக்கு எழுதிய எதிர்ப்புக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
இதற்கிடையில் பாடதிட்டத்தில் மனு ஸ்மிருதியை சேர்க்கும் முடிவை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. 'பல காலமாக அரசியலமைப்பை சூறையாட காத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கனவை நினைவாக்க பிரதமர் மோடி இந்த ராஜதந்திரத்தை அரங்கேற்றியுள்ளார்' என்று காங்கிரஸ் கூறியுள்ளார்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொடர் போராட்டம் காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாணவர் அமைப்புகள் சார்பில் அம்பேத்கர் பாணியில் மனுஸ்மிருதியை தீ வைத்து கொளுத்தியும் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடதக்கது.