மூன்றாவது பதக்கத்தை வெல்லும் முனைப்பில் மானு பாக்கர்!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெற்று மூன்றாவது பதக்கத்தை வெல்லும் முனைப்பில் uள்ளார் மானு பாக்கர்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மானு பாக்கர் கடந்த மாதம் 30-ஆம் தேதி 2-ஆவது வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம், சுதந்திர இந்தியாவில் ஒரே ஒலிம்பிக் போட்டியில் இரு பதக்கங்கள் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை மானு பாக்கர் படைத்திருக்கிறார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு வெண்கலப் பதக்கச் சுற்றில் மானு பாக்கர்/சரப்ஜோத் சிங் இணை 16-10 என்ற புள்ளிகள் கணக்கில் தென் கொரியாவின் லீ வோன்ஹோ/ஒஹ் யெ ஜின் இணையைச் சாய்த்து பதக்கத்தை வென்றது.
முன்னதாக, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி வெண்கலம் வென்ற மானு பாக்கருக்கு இது 2ஆவது பதக்கமாகும். தற்போது 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளார்.
22 வயதான மானு பாக்கர் 590 புள்ளிகள் பெற்று 2ஆம் இடம் பிடித்துள்ளார். ஹங்கேரிய வீராங்கனை 592 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மற்றுமொரு இந்திய வீராங்கனை ஈஷா சிங் 581 புள்ளிகள் பெற்று 18ஆவது இடம் பிடித்து வெளியேறினார். இதன்மூலம் 3ஆவது பதக்கம் வெல்ல மானு பக்கருக்கு நல்ல வாய்ப்பிருக்கிறது. மானு பாக்கர் வென்றால் இந்தியாவுக்கு இது துப்பாக்கி சுடுதலில் 4ஆவது பதக்கத்துக்கும் நல்லதொரு வாய்ப்பாக அமையுமென்பதும் குறிப்பிடத்தக்கது.