நோயாளிக்கு சிகிச்சை அளித்த தூய்மைப் பணியாளர்!
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு தூய்மைப் பணியாளர் ஒருவர் ட்ரிப்ஸ் போடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திருவாரூர் மாவட்ட அரசு தலைமை
மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் பகல், இரவு என பல்வேறு சுற்றுகளாக மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். உள் நோயாளிகள், புற நோயாளிகள் என நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இருப்பினும் இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை நீடித்து வருகிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக இந்த மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு இங்கு பணி புரியும் ஒப்பந்த
தூய்மை பெண் தொழிலாளி ஒருவர் ட்ரிப்ஸ் போடும் வீடியோ ஒன்று சமூக
வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நோயாளிக்கு சிகிச்சை அளித்த பணியாளர் மீதும் அதற்கு காரணமாக இருந்த மருத்துவர் மீதும் தகுந்த
நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர் மற்றும் செவிலியர்
பற்றாக்குறையை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து மன்னார்குடி அரசு மாவட்ட
தலைமை மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடம் கேட்டபோது இதுகுறித்து உரிய
விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.