மண்ணச்சநல்லூர்: பகவதி அம்மன் கோயிலில் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்!
மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயிலில் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. மண்ணச்சநல்லூரில் வணிக வைசிய சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பகவதி அம்மனுக்கு திருவிழா நடைபெறும். அந்த வகையில் 123ம் ஆண்டு திருவிழா டிச.28-ம் தேதி கம்பம் நடுதலுடன் விழா தொடங்கியது. இத்திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.
இதையும் படியுங்கள்: சென்னையில் அமையும் அமெரிக்க விமான உதிரி பாக நிறுவனம்!
திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அதன்படி முதல் நாள் பகவதி அம்மன், இரண்டாம் நாள் வெங்கடாஜலபதியுடன் பத்மாவதி, மூன்றாம் நாள் ஆதிபராசக்தி, நான்காம் நாள் ராஜராஜேஸ்வரி, ஐந்தாம் நாள் வெண்ணனத் தாழி கிருஷ்ணர், ஆறாம் நாள் காமாட்சி அம்மன், ஏழாம் நாள் வளைகாப்பு அம்மன் அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அபிஷேக தீபாரதனை நடைபெற்றது.
இந்த நிலையில் இத்திருவிழாவின் முக்கிய நிகழவான இன்று (ஜன.5) ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 ஆகிய நோட்டுகளால் தோரணம் அமைத்து, பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார மற்றும் அபிஷேக தீபாரதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.