அனைத்து எம்.பி.க்களும் முன்னுதாரணம் மன்மோகன் சிங் | பிரதமர் மோடி புகழாரம்...!
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்னுதாரணமாக மன்மோகன் சிங் திகழ்கிறார் என பிரதமர் மோடி புகழாரம் சூடியுள்ளார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. கடந்த 1ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 10 ஆம் முடிவுக்கு வருகிறது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இரு அவைகளிலும் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, மாநிலங்களவையில் பதவிக்காலம் முடிந்து ஓய்வுப்பெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பிரியாவிடை அளித்தார்.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னுதாரணமாக மன்மோகன் சிங் திகழ்கிறார். முக்கியமான மசோதாக்கள் மீதான வாக்கெடுப்புகளின் போது, உடல் குன்றியிருந்த போது கூட தனது சக்கர நாற்காலியில் வந்து அவர் வாக்களித்தது எனக்கு நினைவிருக்கிறது. ஒரு உறுப்பினர் தனது கடமைகளில் விழிப்புடன் இருப்பதற்கான எடுத்துக்காட்டு இது. ஓய்வு பெற இருக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வணக்கம் செலுத்த விரும்புகிறேன்” என்று கூறினார்.