‘மஞ்சும்மல் பாய்ஸ்’-க்கு வந்த சோதனை - ஓடிடியில் வெளியாவதில் சிக்கல்!
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.
‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே...’ சமூக வலைதளங்களில் தற்போது இந்த பாடல்தான் ட்ரெண்டிங். காரணம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம். மலையாளத்தில் வெளியாகி, கேரளாவை விட தமிழ்நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’.
கடந்த 2006-ம் ஆண்டு கொடைக்கானல் குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவான இந்த படம், தமிழ்நாட்டு மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்னணி நடிகர்களோ, பெரிய விளம்பரமோ இல்லாமல், ஒரு மலையாள படம் தமிழ்நாட்டில் இவ்வளவு பிரம்மாண்டமாக ஓடி வெற்றி பெறும் என்று யாருமே எதிர்பார்த்ததில்லை.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ‘மஞ்சும்மல்’ என்ற சின்ன கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள் குழு ஒன்று கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகிறது. அதில் ஒருவர் குணா குகையில் தவறி விழுந்து விடுகிறார். அவரை அவரது நண்பர்கள் குழு எப்படி மீட்டது என்பதே ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் கதை.இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்த குணா படத்தில் இடம் பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ என்ற பாடல் இடம்பெற்று இருந்தது. இது தமிழ் ரசிகர்களுடன் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் கனெக்ட் ஆக பெரிதும் உதவியது. இதனால் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தை பார்க்க இன்று வரை தமிழ் மக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர்.
ரூ.5 கோடி செலவில் எடுக்கப்பட்ட ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம், ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. மலையாள சினிமாவில் அதிவிரைவில் ரூ.100 கோடி வசூலித்த திரைப்படம் என்ற பெருமையையும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பெற்றுள்ளது. ஒரு புறம் தியேட்டர்களில் ஹீரோவாக வலம் வரும் இப்படம், ஓடிடி ரிலீஸில் சிக்கலை சந்தித்து வருகிறது.
‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ.20 கோடிக்காவது படத்தை விற்றுவிட வேண்டும் என்பதில் தயாரிப்பாளர்கள் உறுதியாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஆனால், திரையரங்குகளில் ப்ளாக்பஸ்டர் வெற்றி கண்ட ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தை பெரும்பான்மையான மக்கள் பார்த்துவிட்ட காரணத்தால், அதிக விலை கொடுத்து வாங்குவது தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று ஓடிடி நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. இதுவரை ரூ.10 கோடி வரை படத்தை வாங்க ஓடிடி நிறுவனங்கள் முன் வந்திருப்பதாகவும், ஆனால் தயாரிப்பாளர்கள் அதற்கு உடன்பாடு தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறு தியேட்டர்களைப் போலவே ஓடிடியிலும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ வெற்றி நடை போடும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில், தயாரிப்பாளர்கள் - ஓடிடி நிறுவனங்களுக்கு இடையிலான அதிருப்தி அதற்கு ‘ஸ்பீட் பிரேக்கர்’ போட்டுள்ளது. விரைவில் நல்ல முடிவு எடுக்கப்பட்டு இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என்று, தியேட்டருக்கு போகாமல் ஓடிடியில் படம் வரும், பார்த்துக்கொள்ளலாம் என்ற மைண்ட்செட்டில் இருக்கும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.