'மஞ்சுமெல் பாய்ஸ்', 'பிரேமலு' எல்லாம் ஓரம் போங்க' - வசூல் வேட்டையில் ஆடுஜீவிதம்!
நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ள ஆடு ஜீவிதம் படம் உலகம் முழுவதும் 9 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டியதாக படக்குழு தெரிவித்து உள்ளது.
மலையாள எழுத்தாளர் பென்யமின் எழுதிய புகழ் பெற்ற ஆடு ஜீவிதம் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ஆடு ஜீவிதம். இயக்குனர் பிளஸ்சி இயக்கி உள்ள இந்த படத்தில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். அமலாபால் நாயகியாக நடித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
சுனில் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி வெளியானது. பான் இந்தியா முறையில் வெளியான இப்படத்தின் மொத்த பட்ஜெட் 80 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. படம் வெளியான மார்ச் 28ஆம் தேதி 16 கோடி ரூபாய் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது படம் வெளியாகி 9 நாட்களை கடந்து விட்ட நிலையில், உலகம் முழுவதும் படம் 100 கோடி ரூபாயைத் தாண்டி வசூலித்து உள்ளதாக படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த ஆண்டு வெளியான மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு ஆகிய மலையாள படங்கள் 100 கோடி ரூபாயை தாண்டி வசூலித்தன.
தற்போது ஆடு ஜீவிதம் படமும் 100 கோடி வசூலித்து உள்ளது. அந்த வகையில், மலையாளத்தில் நடப்பு ஆண்டின் 3வது 100 கோடி ரூபாய் வசூல் சாதனை படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் குறைந்த நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்து மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை சாதனையையும் ஆடு ஜீவிதம் படம் முறியடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.