20ம் தேதி வரை #Manipur - ல் இணைய சேவைக்கான தடை நீட்டிப்பு!
மணிப்பூரில் 5 மாவட்டங்களில் 20ம் தேதி வரை இணைய சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் குடியேறினர். இதையடுத்து மணிப்பூரில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வந்த நிலையில், அங்கு மீண்டும் வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. டிரோன்கள், சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட் உள்ளிட்டவற்றால், ஆயுதம் ஏந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த 7-ந்தேதி நடந்த வன்முறை சம்பவங்களில் 8 பேர் கொல்லப்பட்டனர்,12 பேர் காயமடைந்தனர். இதனால் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரியும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆளூநர் மாளிகை, தலைமைச் செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு மணிப்பூர் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களில் மாணவர்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 60 பேர் காயமடைந்தனர்.
இதையும் படியுங்கள் : Madurai | தனது பிறந்தநாளைக் கேக் வெட்டி கொண்டாடிய அழகர் கோயில் யானை சுந்தரவல்லி!
இதனிடையே வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு 10ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை இணைய வசதிகள் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மணிப்பூரில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சூழலை கருத்தில் கொண்டு, அங்கு இணைய சேவைக்கான தடை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், தவுபால், பிஸ்னுபூர் மற்றும் கக்சிங் ஆகிய 5 மாவட்டங்களில் வரும் 20ம் தேதி வரை இணைய சேவைக்கான தடை நீடிக்கும் என மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.