"மணிப்பூர் ஒரு வருடமாக அமைதிக்காக காத்துக் கொண்டிருக்கிறது; ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்" - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு
மணிப்பூர் ஒரு வருடமாக அமைதிக்காக காத்துக் கொண்டிருக்கிறது என நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் நிகழ்வில் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜூன் 09 அன்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்களும், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள் மற்றும் இணையமைச்சர்கள் பதவியேற்றனர். இதன் மூலம் பிரதமர் மோடி உட்பட 72 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அதில் 30 கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள் மற்றும் 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கான பயிற்சி முகாமின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ் தலைவரான மோகன் பகவத் தெரிவித்ததாவது..
“நாட்டின் எல்லா இடங்களிலும் சமூக ஒற்றுமை இல்லை, இது சாியானதல்ல. மணிப்பூர் இன்னும் பற்றி எரிந்து கொண்டுதான் இருக்கிறது. அங்கே உருவாக்கப்பட்ட துப்பாக்கி கலாச்சாரம் மணிப்பூரை கடந்த ஒரு வருடமாக அமைதியின்மையை ஏற்படுத்தியிருக்கிறது. மணிப்பூரை யார் கவனிக்கப் போகிறார்கள்? நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமான ஒன்று.
ஒரு உண்மையான சேவகர் ஆணவம் இல்லாமல் செயல்பட வேண்டும். தேர்தலின் போது இரு தரப்பினரிடம் இருந்து ஒருவரை ஒருவர் குறைகூறும் விதமாக போலி செய்திகள் பரவின. தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இத்தகைய பொய்கள் பரப்பபட்டது. ஒரு தொழில்நுட்பத்தை இப்படியா பயன்படுத்த வேண்டும்? நாடு இப்படிப்பட்ட பாதையில் பயணித்தால் எப்படி?
நான் எதிர்கட்சியினரை எதிரிகள் என அழைக்க விரும்பவில்லை. எதிர்கட்சிகள் ஒருபோதும் எதிரிகள் அல்ல. நம்மிடைய்ற் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாம் ஒன்றாக பயணித்து ஒருமித்த கருத்து உருவாக்க வேண்டும். ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி இருவரும் நாணயத்திற்கும் இரண்டு பக்கங்கள். ஒருதரப்பினர் திட்டத்தை கொண்டு வந்தால், மறுதரப்பினர் அதன் கண்ணோட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்” என மோகன் பகவத் பேசினார்.