மணிப்பூர் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்யவேண்டும் - அமித்ஷா உத்தரவு !
வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக கலவரத்தின் பிடியில் சிக்கியுள்ளது. மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையேயான இந்த இனக்கலவரத்தில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இதுவரை அங்கு வன்முறை முழுமையாக ஓயவில்லை. இதற்கிடையே கலவரத்தை தூண்டும் வகையில் மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் பேசியதாக ஆடியோ வெளியானது. இந்த விவகாரத்தில் பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ததால் மணிப்பூரில் கடந்த மாதம் 13-ந் தேதி குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று மணிப்பூர் மாநில பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, "மார்ச் 8ம் தேதியில் இருந்து மணிப்பூர் மக்கள் சாலைகளில் சுதந்திரமாக நடமாடுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். சாலைகளில் தடங்கள் ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.