வண்ண விளக்குகளால் மின்னும் மணிமுத்தாறு அணை!
மணிமுத்தாறு அணை 19வது முறையாக முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது.
தென்மாவட்டங்களில் மிகப்பெரிய அணையான திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணை மணிமுத்தாற்றின் குறிக்கே கட்டப்பட்ட அணையாகும். மணிமுத்தாறு அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணியில் கலக்கிறது. இந்த நீர் தாமிரபரணியில் கலந்து வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர்
காமராசரால் கொண்டு வரப்பட்ட அணைத் திட்டமே மணிமுத்தாறு அணையாகும். இந்த அணை 5,511 மில்லியன் கனஅடி கொள்ளளவுடையதாகும். இந்த அணையில் 118 அடி வரை நீரைத் தேக்கலாம்.
தற்போது தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால், 19 வது முறையாக மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது. அணை நிரம்பியதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் அப்பகுதியை வண்ண விளக்குகளால் அலங்கரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர், வண்ணமயமாகப் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது.