முடிவுக்கு வரும் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பயணம்....! வேரோடு பெயர்த்தெடுத்து வீசப்படும் தொழிலார்கள் வாழ்க்கை...!
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பயணம் முடிவுக்கு வருகிறது. பல தலைமுறைகளைக் கடந்து வாழ வைத்த மண்ணை விட்டு அகல மனம் இல்லாமல் பிரியாவிடை கொடுக்க தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தயாராகி வருகின்றனர். விடைபெறும் மாஞ்சோலை தேயிலை தோட்டம் குறித்த தொகுப்பை தற்போது பார்க்கலாம்..
திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது
மாஞ்சோலை, காக்காச்சி நாலுமுக்கு, ஊத்து குதிரை வெட்டி உள்ளிட்ட மலை
கிராமங்கள். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3500 அடி உயரத்தில் மாஞ்சோலையும் 4500
அடி உயரத்தில் காக்காச்சியும் அமைந்திருக்கிறது.
பசுமை போர்த்திய வளங்களையும்
இயற்கை எழிலையும் தன்னகத்தை கொண்டுள்ளது இந்த மலை கிராமங்கள். தமிழகத்தில்
தேயிலை உற்பத்தி செய்யப்படும் ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை உள்ளிட்டவற்றிற்கு
அடுத்தபடியாக முக்கியமான இடத்தை பெறுவது மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள்.
சிங்கம்பட்டி ஜமீனுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தினுடைய அடிப்படையில் சுமார் 99
ஆண்டுகள் குத்தகைக்காக பாம்பே பர்மா டிரேடிங் நிறுவனம் அங்கு தேயிலையை
பயிரிட்டு அறுவடை செய்யும் பணிகளை மேற்கொண்டது. இங்கு உள்ள தேயிலை
தோட்டங்களில் பணிபுரிவதற்காக திருநெல்வேலி மாவட்டத்தின் மானூர் மற்றும்
தூத்துக்குடி, ராஜபாளையம், தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து
ஏராளமான மக்கள் தொழிலாளர்களாக மாஞ்சோலை, காக்காச்சி , நாலுமுக்கு ஊத்து குதிரை வெட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடி பெயர்ந்து பணியாற்றினர்.
பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இங்கு தேயிலை பயிரிடப்பட்டு அறுவடை
செய்யப்படுகிறது. நாள் ஒன்றிற்கு பல ஆயிரம் கிலோ என்ற அளவிற்கு தேயிலை
உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த தேயிலை தோட்டங்களில் தொடக்க காலத்தில்
1800 முதல் 2000 வரை தொழிலாளர்கள் பணிபுரிந்துள்ளனர். பின் நாட்களில்
ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு நிலங்கள் அரசுடமையாக்கப்பட்ட போதும் அரசுடன்
இந்த நிறுவனம் ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொண்டு தொடர்ந்து தேயிலை தோட்டங்களை நடத்தி வந்தது.
தொடர்ந்து நாட்டிலேயே முன்மாதிரியாக கடந்த 1991 ஆம் ஆண்டு முன்னோடியாக மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் ரசாயன கலவைகள் இல்லாமல் தேயிலை
பயிர்கள் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு அவை வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி
செய்யப்பட்டது அதன் அடிப்படையில் தான் மாஞ்சோலை தேயிலைக்கு தனி மதிப்பும்
கிடைத்ததுடன் இன்று வரை அதன் பெயர் ஓங்கி நிற்கின்றது.
மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து குதிரைவெட்டி என்று தனித்தனியாக ஆலைகளை அமைத்து தேயிலை உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குதிரைவெட்டி தேயிலை தோட்டம் மூடப்பட்டது. அங்குள்ள தொழிலாளர்கள் இதர பகுதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கு அவர்கள் பணிபுரிய வழிவகைகள் செய்யப்பட்டது. ஆர்கானிக் தேயிலை உற்பத்தி ஏற்றுமதி என்று தேயிலை தொழில் மிக மும்மரமாக நடைபெற்று வந்த காலகட்டத்தில் தான் 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் தேதி ஊதிய உயர்வு கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற ஊதிய உயர்வு பேரணியில் ஏற்பட்ட வன்முறையில் காவல்துறையின் தடியடி தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓடியவர்கள் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் உயிரிழந்தனர்.
தற்போதைய சூழலில் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் சுமார் 650 தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர் நாள் ஒன்றிற்கு பல்லாயிரம் கிலோ என்று உற்பத்தி செய்யப்பட்டு வந்த தேயிலை உற்பத்தி வெறும் 2000 கிலோ என்ற அளவிற்கு குறைந்துள்ளது. இப்படி பல்வேறு வரலாறுகளையும் தன்னகத்தே கொண்ட மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தின் ஒப்பந்த காலம் வருகின்ற 2028 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் முடிவடைகிறது.
இதற்கு முன்னோட்டமாக கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றமும் மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து உத்தரவும் பிறப்பித்தது. குறிப்பாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அதோடு சேர்ந்து அகத்தியமலை யானைகள் சரணாலயம் என மிக முக்கியமான வனப் பகுதியாகவும் இருப்பதால் இது பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் தேயிலைத் தோட்ட நிர்வாகம் நிலங்களை அரசிடம் ஒப்படைப்பதற்கு தேவையான முன் ஏற்பாடுகளை தேயிலைத் தோட்ட நிர்வாகம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
அதன் ஒரு பகுதி தான் தேயிலை தோட்டத்தில் உற்பத்திகளை நிறுத்தி அங்கு பணிபுரியும்
தொழிலாளர்களுக்கான பண பலன்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக அங்கு பணி புரியும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய சூழலில் தேயிலைத் தோட்ட உற்பத்திகள் மிகப்பெரிய அளவில் இல்லாத
சூழலில் தேயிலைத் தோட்ட நிர்வாகம் பணிகளை நிறுத்திக் கொள்வது என்ற முடிவிற்கு
வந்திருப்பதாக கூறப்படுகிறது அதனால் தொழிலாளர்களுக்கான பணபலன்களை வழங்கி 2028 ஆம் ஆண்டிற்குள் ஒட்டுமொத்த நிலத்தையும் வனத்துறை இடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையாகவே தற்போது இந்த முன்னேற்பாடுகள் தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் தான் வயது வாரியாக பணப்பலன்களை வழங்க
பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வயது அடிப்படையில்
அதிகபட்சமாக 2 லட்சத்து 90 ஆயிரம் வரையிலும் குறைவாக ஒரு லட்சத்து 70 ஆயிரம்
இந்த வகையிலும் பண பலன்கள் வழங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது. நான்கு ஐந்து தலைமுறைகளாக தேயிலைத் தோட்ட பணிகளை பார்த்து
அங்கேயே பிறந்து வளர்ந்த மக்கள் தற்போது தேயிலைத் தோட்ட வாழ்க்கை பயணம்
முடிவுக்கு வருவதை எண்ணி சொல்லணும்னா துயரத்தை அடைந்திருக்கின்றனர். என்பதை அவர்களின் பேச்சிலிருந்து உணர முடிகிறது.
பலரின் தேநீர் சுவைக்கு காரணமான இந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், அட்டைப்
பூச்சிகளின் பசிக்கு தங்களது ரத்தத்தை கொடுத்து, உடலை வருத்தி கடுமையான
சூழல்களுக்கு மத்தியில் குறைந்த ஊதியத்தில் சிக்கனமாக தங்களது வாழ்வாதாரத்தை
மகிழ்ச்சியோடு நடத்திய தாங்கள், தற்போது இந்த தேயிலை தோட்டங்களுடனான
தொடர்புகளை விட்டு விட்டு எப்படி கீழே செல்வது என்று மூச்சடைக்க மன
வருத்தத்தில் ஆழ்ந்து கவலைகளை வெளிப்படுத்துகின்றனர். பழக்கமில்லா காலநிலையிலும், அறிமுகமில்லா வேலைகளையும் செய்தாக வேண்டிய
நிர்ப்பந்தமான சூழலை எதிர்கொள்ள நேரிடுவதை எண்ணி அவர்கள் மனம்
வெதும்புகின்றனர்.
தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் இந்த வாழ்க்கை முடிவுக்கு வந்தாலும் அடுத்த
கட்ட வாழ்விற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழலும் எழுந்திருக்கிறது
வேறு போக்கிடமில்லாமல் அங்குள்ள கூலித்தொழிலாளர்களின் இவ்வளவு கால உழைப்பினை அங்கீகரிக்கும் விதமாக ஒரு நல்ல மாற்று பயணத்தை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது தேயிலை தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
விரைவில் இந்த தேயிலை தோட்டத்தின் வாழ்க்கை பயணம் முடிவுக்கு வரும் என்று
கூறப்படும் நிலையில் அவ்வாறு மக்கள் அனைவரும் அங்கிருந்து சமவெளி பகுதிகளை
நோக்கி முழுமையாக வெளியேற்றப்பட்டால் இன்னும் கொஞ்ச காலத்தில் தேயிலை தோட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்திட்ட சுவடுகள் மொத்தமும் அழிந்துவிடும் என்பதும், அங்கேயே பிறந்து வளர்ந்து அனுபவித்து வாழ்ந்த எனது பிறப்பிடமென எதைக்காட்டுவது என்பதே அந்த மக்களின் கண்ணீருடன் கூடிய இறுதி கருத்தாக இருக்கிறது.