மாஞ்சோலை விவகாரம் - BBTC நிர்வாகத்திடம் மனித உரிமை ஆணையம் தீவிர விசாரணை!
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் உண்மை நிலை குறித்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று பிபிடிசி நிர்வாகத்திடம் விசாரணை நடைபெற்றது.
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் உண்மை நிலை குறித்தும், அவர்களுக்கு
இழைக்கப்படும் அநீதி குறித்தும் விசாரிக்க வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், கடந்த 18ஆம் தேதிமுதல் திருநெல்வேலி மாவட்டத்தில் முகாமிட்டு, மலை கிராமங்களுக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறது. மனித உரிமைகள் ஆணையத்தின் DSP ரவி சிங் மற்றும் காவல் ஆய்வாளர் யோகேந்திர குமார் திரிபாதி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஒவ்வொரு தொழிலாளர்களாக நேரில் அழைத்து, விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த 2 நாட்களாக தொழிலாளர்களிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்று பிபிடிசி நிர்வாகத்திடம் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். விசாரணைக்காக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழங்கிய சம்மன் அடிப்படையில், பிபிடிசி நிர்வாகத்தின் சார்பில், நிர்வாக மேலாளர்கள், கண்காணிப்பாளர்கள், வழக்கறிஞர்கள் என 5 பேர் நேரில் ஆஜராகினர். மணிமுத்தாறு பேரூராட்சி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருவதால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
வரும் 22-ம் தேதி வரை விசாரணை மேற்கொள்ளும் தேசிய மனித உரிமைகள் ஆணையம்,
தனது விசாரணை குறித்து அறிக்கையை தாக்கல் செய்யும். குறிப்பாக இந்த விவகாரத்தில் தேயிலைத் தோட்டங்களை தமிழ்நாடு அரசை ஏற்று நடத்த வேண்டும், என்பதே அனைத்து தொழிலாளர்களின் கருத்தாகவும் இருந்து வருகிறது. தங்கள் கருத்தை விசாரணையில், தேசிய மனித உரிமைகள் ஆணைய குழுவிடம் அனைத்து தொழிலாளர்களும் வலியுறுத்தி, பதிவு செய்து வருகின்றனர்.