தமிழ்நாடு அரசின் சாதனைகளை சொல்லும் ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலி!
தமிழ்நாட்டு அரசின் சாதனைகளையும், இளம் தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு எடுத்துக்கூறும் வகையிலும் ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டில் பவளவிழா காண்கின்றது. இந்த இயக்கத்தின் வரலாற்று நிகழ்வுகளையும், சமூக மாற்றத்தை நிகழ்த்திய மக்கள் நலத் திட்டங்களையும், தமிழ்நாடு அரசு நிகழ்த்தி வரும் சாதனைகளையும் இளம் தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு எடுத்துக் கூறும் வகையிலும் ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பையும், தமிழ்நாட்டிற்கான பொருளாதார மேம்பாட்டையும் ஊக்குவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட வெளிநாட்டு பயணம் உள்ளிட்ட அன்றாட முன்னெடுப்புகள், ஊடகங்களில் திமுக அரசின் செயல்பாடுகளை பாராட்டி வரும் செய்திகள், திமுக கட்சியின் தலைவரின் சமூகவலைத்தள பதிவுகளையும், சாதனை சொல்லும் காணொலிகளும் உடனுக்குடன் ஒரே தளத்தில் தெரிந்துகொள்ளும் வகையில் இந்த செயலி அமைந்துள்ளது.
பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடும் ‘உங்களில் ஒருவன்’ தொடரில், ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலி பயனர்களும் பங்கேற்கும் வகையில் உங்களில் ஒருவன் என்ற பகுதியும் செயலியில் இடம் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவில் தொடங்கப்பட்ட இந்த செயலி இன்று தேர்தல் பரப்புரையில் தமிழ்நாடு அரசின் சாதனை சொல்லும் ஒரு ஆயுதமாக உருவாகி வருகிறது. ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலியை சிறப்பாக பயன்படுத்தும் பயனாளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையொப்பமிட்ட டி-சர்ட்கள் மற்றும் திமுக கொள்கை சொல்லும் புத்தகங்களும் பரிசாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.