60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது!
நெல்லை மாவட்டம் வடக்கண்குளம் அருகே உள்ள பெருங்காளியபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி ரீதா(60). இவர்களுக்கு குழந்தை இல்லை. கணவர் ராஜதுரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். பின்னர் மூதாட்டி ரீதா பெருங்காளியபுரம் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இதையடுத்து மூதாட்டி ரீதா தனது குடும்ப செலவிற்காக ஆடு மேய்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று மூதாட்டி ரீதா தனது வீட்டின் அருகே உள்ள குளக்கரையில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியை சேர்ந்த நபர் மூதாட்டியிடம் பாலியல் சீண்டல் மற்றும் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மூதாட்டி கழுத்தில் இருந்த சுமார் 3 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளார்.
பின்னர் அக்கம்பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பம் குறித்து பணகுடி போலீசார் மூதாட்டியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து போலீசார் பாலியல் சீண்டல் மற்றும் நகை பறிப்பில் ஈடுபட்ட நபரை கைது செய்து அவரிடமிருந்து 3 பவுன் நகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அப்போது குற்றவாளியை கைது செய்ய முயன்ற போது தப்பியோடியதால் கை, கால் முறிவு ஏற்பட்டு தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் மூதாட்டி பாலியல் சீண்டல் மற்றும் நகை பறிப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.