"நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்!" - பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்!
2017-க்கு முந்தைய- மாநிலங்களே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தும் நடைமுறையை அனுமதிக்க வேண்டும் எனவும், தற்போதைய நீட் தேர்வு முறையை ஒழிக்க வேண்டும் எனவும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) தேர்வு தொடங்குவதற்கு முன்பே பீகார் மாநில மையத்தில் வினாத்தாள் கசிந்த சம்பவமும் ஒட்டுமொத்த மாணவர்களையும் பேரதிர்ச்சிக்குள்ளாகியது. நாடு முழுவதும் மே 5-ம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதியவர்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதும் பிரச்னையாக உருவெடுத்தது.
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 பேருக்கும் மறுதேர்வு நாடு முழுவதும் 7 மையங்களில் நேற்று(ஜூன் 23) நடைபெற்றது. நீட் மறு தேர்வு எழுத மாணவர்கள் பலர் வரவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ‘நீட்’ தேர்வு முறைகேடுகள் தொடர்பான விசாரணையை மத்திய கல்வி அமைச்சக பரிந்துரையின்பேரில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) நேற்று (ஜுன் 23) ஏற்றது.
இதைத் தொடர்ந்து விசாரணையை ஏற்றுள்ள சிபிஐ, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. விசாரணைக்காக சிறப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டு இந்த வழக்குக்கு முன்னுரிமை அளித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, ‘நீட்’ தேர்வு முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை கோரி நாடு முழுவதும் மாணவர்கள் போராடிவரும் நிலையில், நீட் தேர்வை மாநில அரசுகள் நடத்த அனுமதிக்கக்கோரி பிரதமருக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் இன்று(ஜூன் 24) எழுதியுள்ள கடிதத்தில், “தற்போதைய நீட் தேர்வு முறைகேடுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. வினாத்தாள் விற்பனை, குறிப்பிட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது, நீட் மோசடிகளில் தேர்வு நடத்தும் அதிகாரிகளே ஈடுபடுவது என்பவை கவலைக்குரியது. இது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இத்தகைய நிகழ்வுகள், பல லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்கால கனவை சிதைத்துவிடுகிறது.
இத்தகைய நிகழ்வுகள் நாட்டின் மருத்துவ கல்வியின் தரத்தை பாழ்படுத்துகின்றன. அத்துடன் ஒட்டுமொத்த மருத்துவ துறையையும் சீரழித்துவிடுகிறது. இத்தருணத்தில் 2017-ம் ஆண்டுக்கு முந்தைய நிலைமையை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 2017-ம் ஆண்டுக்கு முன்னர் மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே நடத்துவதற்கு உரிமை இருந்தது. இன்னொரு பக்கம் மத்திய அரசு இடங்களுக்காக மட்டும் மத்திய அரசு தனியாக நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்தது. இந்த நடைமுறை எந்தவித பிரச்னையும் இல்லாமல் இயங்கி வந்தது.
2017-க்கு முந்தைய மாணவர் சேர்க்கை நடைமுறைதான் சரியானதாகவும் இருந்தது. ஒவ்வொரு மாநில அரசும் ஒரு மருத்துவருக்கு கல்வி மற்றும் உதவித் தொகை வழங்கும் வகையில் ரூ.50 லட்சம் செலவிடுகிறது. ஆகையால்தான் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலங்களுக்கு சுதந்திரம் தேவை. மாநில அரசுகளின் எந்தவித பங்களிப்பும் இல்லாமலேயே நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த கூட்டாட்சி முறைக்கு எதிரானது மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது.
தற்போதைய நீட் தேர்வு முறையானது ஊழலுக்குதான் வழிவகுக்கிறது. பணக்கார மாணவர்கள் ஆதாயமடையும் நிலைமையை நீட் தேர்வு உருவாக்கி இருக்கிறது. ஏழை ஒடுக்கப்பட்ட மக்கள் இதனால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகையால் 2017-க்கு முந்தைய- மாநிலங்களே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறையை அனுமதிக்க வேண்டும். தற்போதைய நீட் தேர்வு முறையை ஒழிக்க வேண்டும். இதுதான் மாணவர்களுக்கு நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்” இவ்வாறு மம்தா பானர்ஜி விவரித்துள்ளார்.