“மல்லு இந்து அதிகாரிகள்”... மதத்தின் பெயரில் வாட்ஸ் அப் குழு - #Kerala ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்!
“மல்லு இந்து அதிகாரிகள்” என்ற வாட்ஸ் அப் குழுவை உருவாக்கியதற்காக கேரள ஐஏஎஸ் அதிகாரிகள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
‘மலையாள இந்து அதிகாரிகள்' என்ற பெயரில் வாட்ஸ் அப் குழுவை தொடங்கி, அதில் சக ஐஏஎஸ் அதிகாரிகளை இணைத்ததோடு, மதம் சார்ந்த கருத்துகளை பதிவிட்ட புகாரில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை கேரள அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. அதிகாரிகள் குறித்து தலைமைச் செயலாளர் சமர்பித்த அறிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலாளர் சாரதா முரளீதரனின் அறிக்கையின் அடிப்படையில் இருவரையும் சஸ்பெண்ட் செய்ய முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். இதுகுறித்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே ராஜன், “அதிகாரிகள் அவர்கள் நினைப்பது போல் செயல்பட முடியாது. அரசாங்க விதிமுறைகளின் படிதான் செயல்பட வேண்டும்” என தெரிவித்தார்
கடந்த மாதம் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி அன்று, 'மல்லு இந்து ஐஏஎஸ் அதிகாரிகள்' என்ற வாட்ஸ்அப் குழு தொடங்கப்பட்டது. மாநில தொழில் மற்றும் வர்த்தகத் துறை இயக்குநர் கே.கோபாலகிருஷ்ணனால் இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் இந்து ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். தீபாவளி தினத்தில் உருவாக்கப்பட்ட இந்தக் குழுவில் இணைய ஒவ்வொருவருக்கும் தகவல் அனுப்பப்பட்டதாகவும், இதன்படி 11 மூத்த அதிகாரிகள் இணைந்ததாகவும் கூறப்படுகிறது.
கோபாலகிருஷ்ணனை பலரும் தொடர்புகொண்டு, தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்தக் குழு நீக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 11 வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டதாகவும், இதில் இளநிலை மற்றும் மூத்த அதிகாரிகள் மட்டுமன்றி, முன்னாள் தலைமைச் செயலாளர் நளினி நெட்டோ-வும் இணைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விளக்கம் அளித்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான கோபாலகிருஷ்ணன், தனது போன் சைபர் குற்றவாளிகளால் ஹேக் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் தனது அனுமதியின்றி குழுக்கள் உருவாக்கப்பட்டதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது ஃபோனை தடயவியல் பரிசோதனைக்கு சமர்பிப்பதற்கு முன், பலமுறை ரீசெட் செய்ததையும் கண்டுபிடித்துள்ளனர்.