மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நிரந்தர நீக்கம்!
மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா மற்றும் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியீருக்கு இடையே உட்கட்சி பூசல் வெடித்தது. மேலும், வைகோவுக்கு எதிராக தனது ஆதரவாளர்களுடன் மல்லை சத்யா கடந்த மாதம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.இதை தொடர்ந்து கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கட்சியின் துணை பொதுச் செயலாளர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்குவதாகவும், 15 நாள்களுக்குள் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கவும் வைகோ தெரிவித்தார். இதையடுத்து அதற்கான விளக்கத்தையும் கடந்த வாரம் மல்லை சத்யா மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில் இன்று மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
”மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை குறிக்கோள், நன்மதிப்பு, ஒற்றுமை ஆகியவற்றிற்கு கேடு விளைவிக்கும் வகையில், பொது வெளியில் கட்சிக்கும், தலைமைக்கும் எதிராக செயல்பட்டு, கழக சட்ட திட்டங்கள் விதி-35 பிரிவு 2-ன் படி, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றம் புரிந்து, கழக சட்ட திட்டங்கள் விதி-35 பிரிவு 6-ன் படி, ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளாகி துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கும் தங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின், சட்ட திட்டங்கள் விதி-19, பிரிவு-5, விதி-19, பிரிவு-12, விதி-35, பிரிவு-14, விதி-35, பிரிவு-15 இன் படி துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கழகத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கி அறிவிக்கிறேன்”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.