கோத்தகிரி அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழப்பு!
கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை பகுதியில் மின்சாரம் தாக்கி, 15 வயது மதிக்கதக்க ஆண்யானை உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனைப் பகுதியில், தனியார்
தோட்டங்களில் விளைந்துள்ள பலாப் பழங்களை உண்பதற்காக யானைகள் அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு தனியார் தோட்டத்தில் உலா வந்த காட்டு யானை ஒன்று பலாப்பழத்திற்காக மரத்தை முட்டியுள்ளது. அப்போது மரம் முறிந்து மின் கம்பியின் மேல் விழுந்துள்ளது. அறுந்து விழுந்த மின்கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழந்துள்ளது.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்,
“புளியன் என்பவரது கன்டிஷன் பட்டா நிலத்தில் இருந்த மரத்தை 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று முட்டி தள்ளியுள்ளது. அப்போது மரம் மின் கம்பி மீது விழுந்து, அதில் இருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் அந்த ஆண் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இது குறித்து உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து நீலகிரி மாவட்ட வன அலுவலர், உதவி வன பாதுகாவலர், கோத்தகிரி வனச்சரக அலுவலர், வனப் பணியாளர்கள், வன ஆர்வலர்கள், மின்சார வாரியத் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் உடனிருக்க, முதுமலை புலிகள் காப்பக கால்நடை உதவி மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் கோத்தகிரி கால்நடை உதவி மருத்துவர் ரேவதி ஆகியோர், இறந்த யானையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது” என தெரிவித்துள்ளனர்.