மலையாளத்தை தொடர்ந்து #Bengali திரைத்துறை... தொடரும் பாலியல் குற்றச்சாட்டுகள்!
மலையாள திரைத்துறையை போல் பெங்காலி திரைத்துறையிலும் பாலியல் தொல்லைகள் நடப்பதாக நடிகை ரிதாபாரி சக்ரவர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பல இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கேரளாவைப் போல பெங்காலி திரைத்துறையிலும் பாலியல் தொல்லைகள் நடப்பதாக பெங்காலி நடிகை ரிதாபாரி சக்ரவர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ஹேமா குழு அறிக்கை மூலம் மலையாளத் திரைத்துறையில் நடந்த பல பாலியல் குற்றங்கள் வெளிவந்துள்ளதை போன்று வங்காளத் திரையுலகில் ஏன் இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை? என்று நான் யோசிக்கிறேன். அந்த அறிக்கையில் வெளியான பல குற்றச்சாட்டுகள் எனக்கும், சக நடிகைகளுக்கும் ஏற்பட்டதைப் போலவே உள்ளன.
இப்படிப்பட்ட கரைபடிந்த மனம் கொண்ட நடிகர்கள்/ தயாரிப்பாளர்கள்/ இயக்குநர்கள் தங்கள் செயலுக்கான எந்த விளைவுகளையும் சந்திக்காமல் தொடர்ந்து வேலை செய்து வருகிறார்கள். பெண்களை வெறும் சதைப்பிண்டங்களாக நினைக்கும் இவர்கள் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவருக்காக மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்வார்கள்.
இதுபோன்ற கொடூரமானவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும். இவர்களுக்கு எதிராக நிற்க எனது சக நடிகைகளை அழைக்கிறேன். இவர்களில் பெரும்பாலானோர் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பதால் நீங்கள் உங்கள் சினிமா வாய்ப்பை இழக்க நேரிடும் என நீங்கள் அஞ்சுவது எனக்குத் தெரியும்.
ஆனால், எவ்வளவு நாட்கள்தான் நாம் அமைதியாக இருப்பது? கனவுகளோடு சினிமா துறைக்கு வரும் இளம் நடிகைகள் மீது நமக்கு பொறுப்பு இல்லையா? இந்தத் துறை இனிப்பு தடவிய விபசார விடுதியென்று அவர்கள் அறியவேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.”
இவ்வாறு நடிகை ரிதாபாரி சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.