#IndependenceDay | "இந்தியாவை 3வது பெரிய பொருளாதார நாடாக உருவாக்க வேண்டும்" - சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரை!
உலக பொருளாதாரத்தில் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
78வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் டெல்லி செங்கோட்டைக்கு வருகை புரிந்தார். அவரை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். தொடர்ந்து 11வது முறையாக பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார்.
கொடி ஏற்றிய பிறகு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, "சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில், நாட்டுக்காக இன்னுயிர் தந்தவர்களை போற்றுகிறேன். விவசாயிகளும், ராணுவ வீரர்களும் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளனர். நாட்டுக்காக தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். சுதந்திர போராட்ட வீரர்களை போல நாமும் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். ஆங்கிலேயர்களை எதிர்த்து 40 கோடி இந்தியர்கள் போராடினர்.
வயநாடு உள்ளிட்ட பேரிடர் பாதிப்பு வருத்தம் அளிக்கிறது. இன்று அவர்களுக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக பல மோசமான பேரிடர்களை எதிர்கொண்டு வந்தாலும், அதில் இருந்து மீண்டு வருகிறோம். இயற்கை பேரிடர்களால் உறவை இழந்தவர்களுக்கு தேச மக்கள் அனைவரும் துணை நிற்பார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.