பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தரிசனம் - லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!
மகரவிளக்கு பூஜை தொடங்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையில், இன்று(ஜன.14) 6 மணியளவில் மகரஜோதி ஏற்றப்பட்டது. இந்த சூழலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை நோக்கிப் படையெடுத்துள்ளனர். மகரஜோதியை முன்னிட்டு கூட்ட நெரிசலை தடுக்க இந்த ஆண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி காண சன்னிதானம் மற்றும் நிலக்கல் ,பம்பை, புல்லு மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கும் நிலையில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சபரி மலையில் நேற்று முன்தினம் மதியம் 1 மணிக்கு பந்தளம் வலியகோயிக்கல் தர்ம சாஸ்தா கோயிலில் இருந்து பவனியாகப் புறப்பட்ட திருவாபரண பெட்டி சன்னிதானம் வந்தடைந்தது. அதை தேவசம் போர்டு சார்பில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர் . இந்த நிலையில் தற்போது மகர விளக்கு பூஜைக்கு முன்னதாக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில் மகரஜோதி ஏற்பட்டது. இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.