'Stranger Things Season - 5' குறித்து வெளியான முக்கிய அப்டேட்!
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் -5ன் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் திரைப்படங்களை போன்று ஹாலிவுட் வெட் சீரிஸ்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவ்வாறு ரசிகர்களை கவர்ந்து இழுத்த சீரிஸ்களில் ஒன்றுதான் 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்'. இதன் முதல் சீசன் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில் வினோனா ரைடர், டேவிட் ஹார்பர், பின் வொல்ஹார்ட், மில்லி பாபி பிரவுன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தொடர்ந்து, அடுத்தடுத்த சீசன்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதுவரை 4 சீசன்கள் வெளியாகி உள்ளன. தற்போது இதன் 5வது சீசன் உருவாகி வருகிறது. இது இந்த தொடரின் கடைசி சீசன் ஆகும். இந்த சீசனுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் இந்த சீசனின் 8 எபிசோடுகளின் தலைப்புகள் வெளியானது.
இந்த நிலையில், தற்போது இத்தொடரின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் -5ன் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசன் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.