#Bengaluru பெண் கொலையில் முக்கிய திருப்பம் - குற்றவாளியாக கருதப்படும் நபர் ஒடிசா மாநிலத்தில் சடலமாக மீட்பு!
பெங்களூருவில் 30பாகங்களாக உடல் துண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட பெண்ணின் கொலையில் தேடப்பட்டு வரும் நபர் ஒடிசா மாநிலத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் வயாலிகாவல் பகுதியில் மகாலட்சுமி (29) என்ற பெண் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். கடந்த 2ம் தேதியிலிருந்து அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் நெலமங்களா பகுதியில் இருந்து பெங்களூருவில் மகாலட்சுமி வசித்த வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆய்வு செய்த போது மகாலட்சுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உடல் 30 பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
பிரேதப் பரிசோதனையில் கொடூரமான ஆயுதத்தால் மகாலட்சுமி கொலை செய்து, உடல் பாகங்களை 30 துண்டுகளாக வெட்டிய தெரியவந்தது. பிரேதப் பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். மகாலட்சுமியின் தாய் மீனா மற்றும் அவரது கணவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும், அவருடன் வேலைப்பார்த்த மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், மகாலட்சுமியை தினமும் அழைத்து சென்று வந்தது தெரியவந்தது.
அந்த இளைஞரை பற்றி தனிப்படை காவல்துறையினர் விசாரணை தொடங்கினர். அப்போது அவரது செல்போன் எண் சுவீட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததாக தகவல் வெளியானது. மேலும் போலீசார் கொலை செய்யப்பட்ட மகாலட்சுமியின் செல்போனை கைப்பற்றினர். அடிக்கடி மகாலட்சுமியின் செல்போன் எண்ணில் இருந்து தலைமறைவான மேற்கு வங்க இளைஞர் செல்போனுக்கு தொடர்பு கொண்டது தெரியவந்தது. அந்த இளைஞர் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த பெண் கொலையில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த முக்தி ரஞ்சன் ரே மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மகாலட்சுமியின் கணவர் தெரிவித்தார். அந்த இளைஞரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தனிப்படை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறை இக்கொலை தொடர்பாக தீவிரமான தேடுதல் வேட்டையில் இறங்கி விசாரணையை முடுக்கி விட்டனர். விசாரணையின் ஒரு பகுதியாக கொலையில் முக்தி ரஞ்சன் ரே முக்கிய குற்றவாளியாக இருந்து வரும் நிலையில் ஒடிசாவில் உள்ள பத்ராக் மாவட்டத்தில் துசுரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தில் முக்தி ரஞ்சன் ரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் உயிரிழப்பு தொடர்பாக அம்மாநில காவல்துறையினர் பெங்களூரு போலீசுக்கு தகவல் அளித்தனர். அவரது மரணம் தற்கொலையாக அல்லது இருவவரின் கொலையில் வேறு ஒருவருக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.