பழவேற்காட்டிற்கு படகில் விரைந்த மஜக பேரிடர் மீட்புக்குழு - மக்களிடம் குறைகளை கேட்டறிந்த தமிமுன் அன்சாரி!
சென்னை பழவேற்காடு பகுதி மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ள நிலையில், அங்கு சிக்கித்தவிக்கும் மக்களுக்கு இரண்டு படகுகளில் மீட்புக்குழுவுடன் சென்று மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி குறைகளை கேட்டறிந்து உதவியுள்ளார்.
சென்னையில் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் மழை நீரால் மூழ்கின. மாநில அரசின் விரைவான நடவடிக்கைகளால் பல பகுதிகளிலும் தண்ணீர் வடிந்து விட்டது என்றாலும் சென்னையின் புறநகர் பகுதிகளில் இன்னும் பல இடங்களில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.
அதேபோல் பழவேற்காட்டில் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. அங்கு யாருடைய உதவிகளும் கிடைக்காத நிலையில், அப்பகுதி மக்கள் மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியை தொடர்பு கொண்டனர். அப்பகுதிகளுக்கு பிரட், குடிநீர், கொசுவர்த்தி, தீப்பெட்டி, பிஸ்கட்டுகள் உள்ளிட்ட பொருள்களுடன் மஜக பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண குழு இரண்டு படகுகளில் விரைந்தது.
இஸ்ரவேல் குப்பம், ராஜரத்தினம் நகரை தொடர்ந்து ரஹ்மத் நகருக்கு படகுகளில் சென்ற மீட்புக்குழு அங்குள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, முதல் கட்டமாக கொண்டுவந்த பொருட்களை அவர்களுக்கு மீட்புக்குழு விநியோகித்தது. அதன்பிறகு விரைவில் அடுத்தகட்ட உதவிகளை ஏற்ப்பாடு செய்து தருவதாக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.