மஹுவா மொய்த்ரா பதவிபறிப்பு - மம்தா பானர்ஜி கண்டனம்!
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவின் பதவிப் பறிப்புக்கு அக் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே புகார் அளித்தார். இந்தப் புகாரை விசாரிக்க மக்களவை நெறிமுறைகள் குழுவுக்கு ஓம் பிர்லா பரிந்துரைத்தார். அதன்படி, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு இதுகுறித்து விசாரித்து வந்தது.
தொடர்ந்து, நெறிமுறைகள் குழு, மஹுவாவை எம்.பி. பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்து அறிக்கை ஒன்றை தயார் செய்தது. அந்த அறிக்கையை குழுவின் தலைவர் வினோத் குமார் சோன்கர் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது அமளி காரணமாக பிற்பகலுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிற்பகல் அந்த அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, மக்களவையில் இருந்து திரிணாமூல் எம்.பி. மஹுவா மொய்த்ராவை நீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து மக்களவையில் இருந்து திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா நீக்கப்பட்டதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மஹுவா மொய்த்ரா தகுதிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகளின் உறுப்பினர் வெளிநடப்பு செய்தனர்.
இதனிடையே, மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, மஹுவா மொய்த்ராவின் பதவி பறிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இப்படி ஒரு முக்கியமான முடிவை எடுப்பதில் அவசரம் என்ன என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் பேசியதாவது:
“இந்த 495 பக்கங்களை அரை மணி நேரத்திற்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படிப் பார்ப்பார்கள். அனைவரும் எப்படி முடிவெடுப்பார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. I.N.D.I.A. கூட்டணி ஒற்றுமையாக இருப்பதற்கு நான் வாழ்த்துகிறேன். நாங்கள் மீண்டும் போராடுவோம். இந்த விஷயத்தில், மஹுவா பாதிக்கப்பட்டவர். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். மேலும் I.N.D.I.A. கூட்டணி முற்றிலும் மஹுவாவுடன் நிற்கிறது.
இது பாஜகவின் பழிவாங்கும் அரசியல். பாஜகவின் இது போன்ற செயல் மன வருத்தம் அளிக்கிறது. அவர்கள் ஜனநாயகத்தை படுகொலை செய்கிறார்கள். இது அநீதி. போரில் மஹுவா வெற்றி பெறுவார். மக்கள் நீதி வழங்குவார்கள். அடுத்த தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.