#MahaVishnu சொற்பொழிவு விவகாரம் | விசாரணை அறிக்கையை நாளை தாக்கல் செய்கிறார் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்!
சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை பள்ளி நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்த பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் விசாரணை அறிக்கையை நாளை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் மூட நம்பிக்கையை வளர்க்கும் வகையில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அப்பள்ளியின் பார்வை மாற்றத்திறனாளி தமிழ் ஆசிரியர் சங்கர் என்பவருக்கும், மகாவிஷ்ணுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
பின்னர் சிட்னியில் இருந்து விசாரணைக்கு வருவதாக மஹா விஷ்ணு வீடியோ வெளியிட்டிருந்தார். தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்திலேயே வைத்து சைதாப்பேட்டை உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின்கீழ் சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து மகாவிஷ்ணுவை செப். 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக சென்னையில் பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இச்சம்பவம் கண்டனத்துக்குரியது எனவும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தார். இதன் அடிப்படையில் சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை பள்ளிகளின் நிலவரங்கள் குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணை 3 அலுவல் நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, விசாரணை அறிக்கை இன்று (செப். 9) தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசாரணை நிறைவு பெற்றபின் அறிக்கை நாளை (செப். 10) தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.