#Mahavishnu -க்கு செப்.20-ம் தேதி வரை நீதிமன்ற காவல் - சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு!
அரசு பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவிற்கு வரும் செப். 20-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் மூட நம்பிக்கையை வளர்க்கும் வகையில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். அப்பள்ளியின் பார்வை மாற்றத்திறனாளி தமிழ் ஆசிரியர் சங்கர் என்பவருக்கும், மகாவிஷ்ணுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து சைதாப்பேட்டை காவல்துறை வழக்கு பதிவு செய்தது. பின்னர் சிட்னியில் இருந்து விசாரணைக்கு வருவதாக மஹா விஷ்ணு வீடியோ வெளியிட்டிருந்தார். தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்திலேயே சைதாப்பேட்டை உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படியுங்கள் : ஆம்புலன்ஸில் சென்ற உடல்நிலை சரியில்லாத உரிமையாளர்… கண்கலங்கச் செய்த நாயின் பாசப்போராட்டம்!
அந்த விசாரணையில், மகாவிஷ்ணுவை செப்.20ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், 3 நாட்கள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் மகாவிஷ்ணு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவை அடுத்து மகாவிஷ்ணுவை போலீசார் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.