#MaharastraElection | அவதான் கிராமத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பூஜ்ஜிய வாக்குகளைப் பெற்றாரா ? - உண்மை என்ன ?
This news Fact Checked by ‘AajTak’
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் ஒரு கிராமத்தில் காங்கிரஸ் வேட்பாளருக்கு பூஜ்ஜிய வாக்குகள் கிடைத்ததாகவும் , தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் கூறி வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி போராடுவதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. இதுகுறித்து உண்மைத் தன்மையை காணலாம்.
மகாராஷ்டிராவில் மாநிலத்தில் தேர்தல் முடிந்து மகாயுதி கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் ஒரு கிராமத்தில் காங்கிரஸ் வேட்பாளருக்கு பூஜ்ஜிய வாக்குகள் கிடைத்ததாக சமூக வலைதளப் பயனர்கள் சிலர் வீடியோவைப் பகிர்ந்தனர். அந்த வீடியோவில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் குணால் பாபா ரோஹிதாஸ் பாட்டீலுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காததால் மோசடி நடைபெற்றதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவைப் பகிர்ந்த ஒரு பேஸ்புக் பயனர் "மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தேர்தல் முடிவுகளில் மோசடி நடந்துள்ளதாக கூறி தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள். காங்கிரஸுக்கு அவர்களின் கிராமத்தில் பூஜ்ஜிய வாக்குகள் கிடைத்துள்ளன! அந்த கிராமம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான கிராமமாகும். இருப்பினும் பூஜ்ஜிய வாக்குகள் என்பது அதிர்ச்சி அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளதாக அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை சரிபார்ப்பு :
சமூகவலைதளங்களில் வைரலான வீடியோ ஆஜ்தக் ஆய்வுக்கு உட்படுத்தியதில் துலேயின் அவதான் கிராமத்தைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் குணால் பாபா ரோஹிதாஸ் பாட்டீல் மொத்தம் 1057 வாக்குகள் பெற்றுள்ளதாக ஆஜ் தக் உண்மைச் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை துலேயின் மாவட்ட தகவல் அதிகாரி விலாஸ் போட்கே ஆஜ் தக்கிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
வைரலான இடுகையைப் பற்றித் கூகுளில் தேடிய போது, மாவட்ட தகவல் அலுவலகமான X பக்கத்ஹ்டில் ஒரு இடுகை கிடைத்தது. அந்த இடுகையில் அவதான் கிராமத்தில் மொத்தம் நான்கு வாக்குச் சாவடிகள் இருந்ததாகவும் அவற்றில் குணால் பாபா ரோஹிதாஸ் பாட்டீல் ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் முறையே 227, 234, 252 மற்றும் 344 வாக்குகள் பெற்றதாகவும் அதாவது மொத்தம் 1057 வாக்குகள் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைய இணையதளத்தின்படி , துலே சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராகவேந்திர மனோகர் பாட்டீல் மொத்தம் 170398 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். குணால் பாபா ரோஹிதாஸ் பாட்டீல் 104078 வாக்குகள் பெற்றுள்ளார். இது குறித்து மேலும் தகவல் பெற மாவட்ட தகவல் அதிகாரி விலாஸ் போட்கேவை தொடர்பு கொண்டோம். துலே ஊரக சட்டமன்றத் தொகுதியில் வாக்குப் பதிவு தொடர்பான அரசு ஆவணத்தை அவர் எங்களுக்கு அனுப்பினார். இதிலும் அவதான் கிராமத்தில் ரோஹிதாஸ் பாட்டீல் பெற்ற மொத்த வாக்குகள் 1057 என எழுதப்பட்டுள்ளது.
இது குறித்து குணால் பாபா ரோஹிதாஸ் பாட்டீலிடமும் பேசினோம். அவதன் கிராமத்தில் தமக்கு பூஜ்ஜிய வாக்குகள் கிடைத்ததாக கூறப்படுவது முற்றிலும் தவறானது என்று அவர் எங்களிடம் கூறினார். இருப்பினும், அவதன் உட்பட அனைத்து கிராமங்களிலும் அவர் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவான வாக்குகளைப் பெற்றதாக அவரும் அவரது ஆதரவாளர்களும் கருதுகின்றனர். சில பயனர்கள் தனக்கு பூஜ்ஜிய வாக்குகள் கிடைத்ததாக சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
வைரலான வீடியோவின் உண்மைக் கதை :
பல மராத்தி மொழி செய்தி நிறுவனங்கள் இந்த வீடியோவை அவதான் கிராம மக்களின் போராட்டம் என பகிர்ந்துள்ளன. தேர்தல் முடிவுகளில் அவதான் கிராம மக்கள் திருப்தி அடையவில்லை என்று இந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளது. குணால் பாபா ரோஹிதாஸ் பாட்டீல் குறைவான வாக்குகளைப் பெற்றதால் தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியபோது, இந்த வீடியோ துலேவிலிருந்தே எடுக்கப்பட்டது என்று ஆஜ் தக்கின் துலே நிருபர் ரோஹினி தாக்கூர் எங்களிடம் கூறினார். ரோஹிதாஸ் பாட்டீலின் தனிச்செயலருமான சுடாமன் பாட்டீலும் துலேயில் நடந்த போராட்டத்தின் வீடியோ என்று எங்களுக்குத் தெரிவித்தார். எனவே மகாராஷ்டிரத் தேர்தலில் துலேயின் அவதான் கிராமத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பூஜ்ஜிய வாக்குகளைப் பெற்றதாகக் கூறுவது தவறானது.
முடிவு :
மகாராஷ்டிராவின் துலேயில் உள்ள அவதான் கிராமத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள். இருந்தபோதிலும், தேர்தல் முறைகேடுகளால், காங்கிரஸ் வேட்பாளர் குணால் பாபா பாட்டீலுக்கு இந்த கிராமத்தில் பூஜ்ஜிய வாக்குகளே கிடைத்தன. உண்மை குணால் பாபா பாட்டீல் துலே கிராமப்புற சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக இருந்தார் மற்றும் அவதான் கிராமத்தில் மொத்தம் 1057 வாக்குகள் பெற்றார்.
Note : This story was originally published by ‘AajTak’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.