மகாராஷ்டிரா தேர்தல் | "நாம் ஒற்றுமையுடன் இன்னும் பல உயரங்களை அடைவோம்" - பிரதமர் நரேந்திர மோடி!
மகாராஷ்டிரா தேர்தல் பாஜக முன்னிலை பெற்றுள்ள நிலையில், நாம் ஒற்றுமையுடன் இன்னும் பல உயரங்களை அடைவோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒரேகட்டமாக நவ.20ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும், பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் இணைந்து மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா தேசியவாத காங்கிரஸ் இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் களமிறங்கின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்கவைப்பது உறுதியாகியுள்ளது. இந்த வெற்றியை பாஜக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்காக மகாராஷ்டிர மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளபக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
"வளர்ச்சி வெற்றி பெற்றுள்ளது. நல்லாட்சி வெற்றி பெற்றுள்ளது. நாம் ஒற்றுமையுடன் இன்னும் பல உயரங்களை அடைவோம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வழங்கியதற்காக மகாராஷ்டிர மாநிலத்தின் சகோதர, சகோதரிகளுக்கும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அன்பும், அரவணைப்பும் ஈடு இணையில்லாதது. மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து உழைக்கும்"
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.