ஹரியானா தேர்தலுக்கு பிறகே மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் அறிவிப்புகள் - #ElectionCommission திட்டவட்டம்!
ஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநிலங்களுக்கான தேர்தல் முடிவு வெளியான பிறகே மகாராஷ்டிரா , ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வருடம் ஹரியானா, ஜார்கண்ட் , மகாராஷ்டிரா மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக ஆகஸ்ட் 16ம் தேதி டெல்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார்மற்றும் டாக்டர் சாந்து ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் ஹரியானா மாநிலத்திற்கான தேர்தல் தேதி தொடர்பாக அறிவிப்புகளை வெளியிட்டனர். அதே போல ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கான தேர்தல் தேதிகளையும் அறிவித்துள்ளனர். ஹரியானா மாநிலத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி செப். 18, 25 மற்றும் அக். 1 என 3 கட்டங்களாக ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல அக். 1ம் தேதி ஹரியானாவில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக். 4-ம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர், ஹரியானாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.
இந்த தேர்தலோடு மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்துக்கான தேர்தல் தேதியை அறிவிக்காததால் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தன. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநிலங்களுக்கான தேர்தல் முடிவு வெளியான பிறகே மகாராஷ்டிரா , ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்ட சபையின் பதவி காலம் நவம்பர் 26-ந்தேதியும் . ஜார்க்கண்ட் மாநில சட்ட சபையின் பதவிகாலம் ஜனவரி 5-ந்தேதியும் நிறைவடைகிறது. இந்த நிலையில்தான் அக்டோபர் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு இரண்டு மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.