Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல்... அக்னி பரீட்சை யாருக்கு…?

08:41 PM Oct 16, 2024 IST | Web Editor
Advertisement

ஜம்மு காஷ்மீர், ஹரியானா ஆகிய மாநிலங்களின் தேர்தலைத் தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் அடுத்த இரு மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20-ஆம் தேதியும் ஜார்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு நவம்பர் 13 மற்றும் 20-ஆம் தேதி என இரண்டு கட்டங்களாகவும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் N.D.A, மற்றும் I.N.D.I.A கூட்டணிகளுக்கு இடையிலான மற்றுமொரு நேரடிப் போட்டியாக அமைந்துள்ளது.

Advertisement

திருப்பங்கள் நிறைந்த மகாராஷ்டிரா

குறிப்பாக, பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு பெயர் பெற்ற மகாராஷ்டிராவில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவசேனா, அஜித் பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா யுதி கூட்டணி ஆட்சி தற்போது உள்ளது. எதிர் முகாமில் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ், முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே பிரிவு சிவசேனா, மூத்த தலைவர் சரத்பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மகா விகாஸ் அகாடி உள்ளது. இவை தவிர தனித்தும் கூட்டணியிலும் களமிறங்கும் கட்சிகளும் உள்ளன. ஆனால், மகாயுதி, மகா விகாஸ் அகாடி ஆகிய இரண்டு கூட்டணிக் கட்சிகளுக்கும் இந்த தேர்தல் அக்னி பரீட்சையாக அமைந்துள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

முறிந்த நீண்ட கால நட்பு

இதற்கு சற்று பின்னோக்கியும் செல்ல வேண்டியுள்ளது. கடந்த 2014 தேர்தலில் 122 இடங்களில் வென்ற பாஜக, சிவசேனாவின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை அமைத்தது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆட்சிக்கு தற்காலிக முற்றுப்புள்ளியை வைத்தது. இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் பாஜக- சிவசேனா கூட்டணியே தொடர்ந்தது. இந்த தேர்தலில் 164 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 105 இடங்களிலும் 126 தொகுதிகளில் போட்டியிட்ட சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. பாஜகவும் சிவசேனாவும் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதலமைச்சர் யார்? என்பதில் இருகட்சிகளின் தலைவர்களுக்குள் ஒத்த கருத்து ஏற்படவில்லை.

அடுத்தடுத்த திருப்பங்கள்

இதனால், பாஜக - சிவசேனாவின் நீண்ட கால கூட்டணியும் முடிவுக்கு வந்தது. அடுத்த திருப்பமாக தேர்தல் களத்தில் எதிரும் புதிருமாக இருந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து, மகா விகாஸ் அகாடி என்கிற கூட்டணியை அமைத்து, ஆட்சியமைத்தது சிவசேனா. அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே முதலமைச்சரனார். இந்த ஆட்சியும் 2022 ஜூன் வரைதான் நீடித்தது. சிவசேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் மூத்த அமைச்சராகவும் இருந்த ஏக்நாத் ஷிண்டே அன்றைய முதலமைச்சரும் கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்ரேவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். மகாராஷ்ட்ராவில் மீண்டும் காட்சியும் ஆட்சியும் மாறியது.

உடைந்த கட்சிகள்

சிவசேனா எம்.எல்.ஏக்கள் 37 பேருடன் பிரிந்து பாஜக ஆதரவுடன் முதலமைச்சரானார் ஏக்நாத் ஷிண்டே. தனிப்பெரும் கட்சியாக 105 இடங்களுடன் இருக்கும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சரானார். அடுத்த சில மாதங்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவரும் சரத் பவாரின் நெருங்கிய உறவினருமான அஜித் பவார் 39 ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பிரிந்தார். பாஜக, சிவசேனா ஏக்நாத் ஷிண்டே பிரிவுடன் இணைந்து, மீண்டும் துணை முதலமைச்சரானார் அஜித் பவார். இந்த அணி மகா யுதி கூட்டணி என்று அழைக்கப்படுகிறது.

உத்தவ், சரத் பவாருக்கு நெருக்கடி?

தங்களிடமிருந்து பிரிந்து ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தது மட்டுமின்றி கட்சி, சின்னத்தையும் தக்க வைத்துக் கொண்டுள்ள ஏக்நாத் ஷிண்டேவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைக்கிறார் உத்தவ் தாக்ரே. அரசியல் சாணக்கியர் என்று அழைக்கப்படுகிற, சரத் பவாருக்கும் இதே நிலைதான். இவர்களிடமிருந்து பிரிந்து சென்ற ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாருக்கு மட்டுமல்ல, இவர்கள் இருவரையும் தங்கள் அணியில் வைத்துள்ள பா.ஜ.கவும் தனது செல்வாக்கை தக்க வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதற்கு ஆட்சியின் மீதான அதிருப்தி குரல்களை காரணம் காட்டுகின்றனர் விமர்சகர்கள்.

வெற்றியைத் தக்க வைப்பார்களா..?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் I.N.D.I.A (மகா விகாஸ் அகாடி) கூட்டணி 30 இடங்களிலும் என்.டி.ஏ 17 இடங்களிலும் வென்றன. இந்த வெற்றியை சட்டப்பேரவைத் தேர்தலிலும் மகா விகாஸ் அகாடி தக்க வைக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. தனித் தனி அணியாக இருந்தாலும், பாஜக, காங்கிரஸ். சிவசேனாக்கள், தேசியவாத காங்கிரஸின் இரண்டு பிரிவுகள் என 6 கட்சிகளுக்கும் முக்கிய களமாக மட்டுமல்ல, அக்னிப் பரீட்சையாகவும் இந்த தேர்தல் அமைந்துள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

ஜார்கண்டில் செல்வாக்கு யாருக்கு?

ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக உள்ளார். ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை என்கிற நிலையில், 30 எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ள ஹேமந்த் சோரன், 18 எம்.எல்.ஏக்களைப் பெற்றுள்ள காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியில் உள்ளார். பா.ஜ.க 26 உறுப்பினர்களுடன் வலுவாக உள்ளது. ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதும், கொஞ்ச காலம் முதலமைச்சராக பொறுப்பேற்றிருந்த சம்பாய் சோரனோ தற்போது பா.ஜ.கவில் இணைந்துள்ளார்.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மூத்த தலைவராக இருந்தது, பழங்குடியின மக்களிடம் உள்ள செல்வாக்கு, எளிய தோற்றம் என அவருடன் சேர்ந்து பாஜகவிற்கு பலனளிக்குமா? சிபு சோரன் குடும்ப செல்வாக்கு மீண்டும் நிலைநாட்டப்படுமா? மாநிலத்தில் எதிர்க்கட்சி நிலையில் இருந்து ஆளுங்கட்சி என்கிற நிலைக்கு பா.ஜ.க முன்னேறி ஆட்சியைப் பிடிக்குமா? என்கிற கேள்விகள் இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஒரு அக்னி பரீட்சையாக மாறும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

தொகுதிப் பங்கீட்டில் எழும் சிக்கல்கள்

அதிருப்தி வேட்பாளர்கள், தொகுதி நிலவரம், மக்களின் எதிர்ப்பார்ப்புகள் என எல்லாவற்றையும் கடந்து, அக்னி பரீட்சையில் வெல்லப்போவது யார்? மக்களின் மகுடம் யாருக்கு? வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நவம்பர் 23ம் தேதி வரை காத்திருப்போம்.

Tags :
Assembly Election2024IndiaJharkhandJharkhand ElectionMaharashtrandanews7 tamil
Advertisement
Next Article