மகாராஷ்டிரா தேர்தல் | 3வது முறையாக சட்டமன்ற உறுப்பினராகும் மும்பை தமிழர்!
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்ட தமிழர் கேப்டன் தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றுள்ளார்.
288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒரேகட்டமாக நவ.20ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும், பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் இணைந்து மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா தேசியவாத காங்கிரஸ் இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் களமிறங்கின. இந்த தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் சியோன் கோலிவாடா தொகுதியில் பாஜக வேட்பாளராக கேப்டன் தமிழ்செல்வனும், காங்கிரஸ் வேட்பாளராக கணேஷ் குமார் யாதவும் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (நவ.23) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக 145 இடங்கள் தேவை.இதில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 187 இடங்களில் வெற்றி, 48 இடங்களில் முன்னிலை என 235 இடங்களை தன் வசம் வைத்துள்ளது. அதேபோல், காங்கிரஸ் கூட்டணியான மகா விகாஸ் அகாடி 42 இடங்களில் வெற்றி, 7 இடங்களில் முன்னிலை என மொத்தம் 49 இடங்களை தன் வசம் வைத்துள்ளது.
இதன் மூலம் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்ற உள்ளது. இதனால், மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. இந்தத் தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்கள் கவனிக்கப்பட்டது போலவே, ஒரு தமிழரின் தேர்தல் முடிவும் பெரிதாக கவனிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த இரு முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர் தமிழர் கேப்டன் தமிழ்ச்செல்வன்.
தமிழ்ச்செல்வன் பாஜக சார்பாக தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் சியோன் கோலிவாடா தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட காங்கிரஸ் தரப்பில் கணேஷ் குமார் யாதவ் போட்டியிட்டார். இதில், கேப்டன் தமிழ்ச்செல்வன் மொத்தம் 73,429 வாக்குகளையும், கணேஷ் 65,534 வாக்குகளையும் பெற்றனர். இதன் மூலம், கேப்டன் தமிழ்ச்செல்வன் 7,895 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.