For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அஜித் பவார் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் 4 பேர் விலகல்! மகாராஷ்டிர அரசியலில் திடீர் பரபரப்பு!

02:02 PM Jul 17, 2024 IST | Web Editor
அஜித் பவார் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் 4 பேர் விலகல்  மகாராஷ்டிர அரசியலில் திடீர் பரபரப்பு
Advertisement

மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் தோல்வியின் எதிரொலியாக அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து 4 முக்கியத் தலைவர்கள் விலகி உள்ளனர்.

Advertisement

கடந்த 2023ம் ஆண்டு அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சரத் பவாரிடமிருந்து பிரிந்ததால் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டு அணியாக பிளவுபட்டது. சரத் பவார் எதிர்க்கட்சிகளுடன் இருந்த நிலையில், அஜித் பவார் ஏக்நாத் ஷிண்டே கூட்டணியில் இணைந்தார்.

நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் மஹாயுதி கூட்டணி (பாஜக,  முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா, அஜித் பவார் தலைமையிலான என்சிபி) மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது.  மறுபுறம், மஹா விகாஸ் அகாதி கூட்டணி (காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா, சரத் பவார் தலைமையிலான என்சிபி) 30 இடங்களைக் கைப்பற்றியது.

மக்களவைத் தேர்தலில் அஜித் பவாரின் கட்சி 4 தொகுதிகளில் போட்டியிட்டு ராய்கட்டில் மட்டும் வெற்றி பெற்றது. சரத் பவாரின் கட்சி மக்களவைத் தேர்தலில் 8 இடங்களில் வென்றது. இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது.

இதனிடையே, கடந்த ஜுன் மாதம் சரத் பவார், "கட்சியினை பலவீனப்படுத்த முயற்சித்தவர்களுக்கு கதவுகள் மூடப்பட்டுவிட்டது, என்றாலும் கட்சியின் பெயரினை களங்கப்படுத்தாமல் அமைப்பினை வலுப்படுத்தக்கூடிய தலைவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்" என்று தெரிவித்தார். இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் தோல்வியின் எதிரொலியாக அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியைச் சேர்ந்த 4 முக்கியத் தலைவர்கள் விலகி உள்ளனர்.

அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய 4 முக்கியத் தலைவர்களும் மூத்த தலைவர் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி அணியில் சேர உள்ளனர்.  பிம்ப்ரி சின்ச்வாட் பிரிவின் தலைவரான அஜித் கவாஹனே, மாணவர் தலைவர் யாஷ் சானே, ராகுல் போஸ்லே மற்றும் பங்கஜ் பாலேகர் ஆகியோர் அஜித் பவார் அணியில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதுகுறித்து அஜித் கவாஹனே கூறுகையில், “நான் நேற்று ராஜினாமா செய்தேன். இன்று நாங்கள் முன்னாள் உறுப்பினர்கள் அனைவரும் சந்திக்க இருக்கிறோம். அங்கு எங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து நாங்கள் முடிவெடுப்போம். நாங்கள் பவார் சாஹேப்பின் (சரத் பவார்) ஆசிர்வாதத்தை பெறப்போகிறோம். நாங்கள் இணைந்து முடிவெடுப்போம்.” என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement