கோலாகலமாக தொடங்கியது மகா கும்பமேளா திருவிழா!
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி இன்று கோலாகலமாக தொடங்கியது. 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த விழா உலகின் மிகப்பெரிய மத திருவிழா ஆகும். பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 45 கோடி பேர் விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகளும் சங்கமிக்கும் இடத்தை திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுவது வழக்கம். கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை இந்துக்கள் புனிதமாக கருதுகின்றனர்.
இந்த நிலையில் பிரயாக்ராஜ் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு காவல் துறைக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பிரயாக்ராஜ் நகரில் உள்ள கோயில்கள், அகாராக்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநில காவல் துறை தலைவர் (டிஜிபி) பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் விழாவில் கலந்துகொள்ள வருபவர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தங்குவதற்கு தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தனி சிற்றுண்டி பகுதி மற்றும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில மருத்துவ உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.