மகா அஷ்டமி: கோயில்களில் குவியும் பக்தர்கள்!
மகா அஷ்டமியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்யப்பட்டன.
நாடு முழுவதும் நவராத்திரி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியின் போது முப்பெரும் தேவியரான லெஷ்மி, சரஸ்வதி, பார்வதி ஆகிய மூன்று தேவிகளின் வெவ்வேறு வடிவத்தை ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்வது வழக்கம்.
நவராத்திரி முதல் மூன்று நாட்கள் பார்வதி தேவிக்கு உரித்தான நாட்களாகும். 4,5 மற்றும் 6ம் நாட்கள், மகாலக்ஷ்மிக்கு உரிய நாட்களாகும். அடுத்ததாக வரும், அதாவது கடைசி 3 நாட்கள், கலைகளின் அதிபதி சரஸ்வதி தேவிக்கு உரியதாகும். கல்வி, அறிவு, பேச்சு, எழுத்து, ஆடல். பாடல், என்று எல்லா கலைகளுக்கு அதிபதியான சரஸ்வதி தேவியின் அருள் இருந்தால், அவரவர் துறையில் தேர்ச்சி பெற்று, தொடர்ச்சியான வெற்றியை பெற முடியும் என்பது மக்களின் நம்பிக்கை.
அந்த வகையில் நவராத்திரியின் எட்டாவது நாள் மிகவும் விஷேஷமானது. எட்டாவது நாளில் வருவதுதான் மகா அஷ்டமி. இந்நாளில் துர்கையின் மகா கௌரி அவதாரத்தை வழிபடுவது பாரம்பரியம் ஆகும். இந்நாளில் அம்பிகையின் திருவருள் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் நாடு முழுவதும் இன்று மகா அஷ்டமி மற்றும் ஆயுத பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அனைத்து துர்க்கை கோயில்களிலும் மக்கள் இன்று சிறப்பு பூஜைகளை மேற்கொண்டுள்ளனர். வீட்டிலும் சிறப்பு பூஜைகள் செய்து விரதம் மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு வகையான வழிபாட்டை பின்பற்றுகின்றனர்.