மதுரை | வாகனம் பழுதுபார்க்க பணம் கேட்ட கடைக்காரரை தாக்கிய எஸ்.ஐ சஸ்பெண்ட்!
மதுரையில் பணம் கொடுக்காமல் இலவசமாக புல்லட்டை பழுது நீக்கி தருமாறு ஒர்க் ஷாப் ஓனரை தாக்கிய எஸ்.ஐ-யை சஸ்பெண்ட் செய்ய எஸ்.பி உத்தரவு அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் மெக்கானிக் கடை வைத்திருக்கிறார். இவரது கடைக்கு பாலமேடு காவல் நிலையத்தை சேர்ந்த எஸ்.ஐ அண்ணாதுரை என்பவர் அடிக்கடி வாடிக்கையாக வருவார். அப்படி வரும்போதெல்லாம் பணம் கொடுக்காமல் இலவசமாக தொடர்ந்து தனது புல்லடை பழுது நீக்கம் செய்ய கூறி உள்ளார். ஒரு கட்டத்தில் அவரது பாக்கி 8,000 ரூபாய்க்கு மேல் தாண்டியது.
பழைய பாக்கியை திருப்பி தராத நிலையில் மீண்டும் கடைக்கு வந்து தனது புல்லட்டை பழுது நீக்கம் செய்யக் கூறியுள்ளார். இதற்கு சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில் ஆத்திரமடைந்த சீருடையில் இருந்த எஸ்.ஐ அண்ணாதுரை கடைக்குள் புகுந்து அவரை கன்னத்தில் கடுமையாக அடித்தார். நடந்த இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது.
இது குறித்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் எஸ்.ஐ மீது ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மெக்கானிக் கடை ஓனர் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் எஸ்.ஐ அண்ணாத்துரையை பணியிடை நீக்கம் செய்ய மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவு வழங்கினார். மேலும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அண்ணாதுரையிடம் துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.