மதுரை | பாலமேடு ஜல்லிக்கட்டு - 2ம் சுற்றின் முடிவில் 14 பேர் காயம், 4 பேர் இறுதிச்சுற்றுக்கு தகுதி!
இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி தை முதல் நாளன்று மதுரை அவனியாபுரத்தில் நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து இன்று (ஜன. 15) மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி கலை கட்ட தொடங்கியது. இந்த போட்டியை பத்திர பதிவு மற்றும் வணிகத்துறை அமைச்சர் மூர்த்தி காலை 7:40 மணிக்கு தொடங்கி வைத்தார்.
இதில் 1100-ற்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 900-ற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு உரிய மருத்துவ சோதனை செய்யப்பட்டது. அதன் பிறகே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். விதிமுறைகளை மீறுபவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுகின்றனர். இந்தப் போட்டியை காண உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பார்வையாளர்களும் பாலமேடு வருகை தந்துள்ளனர். போட்டியில் சிறந்து விளங்கும் காளை மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. முதல் சுற்று முடிவில் 4 பேர் இறுதி சுற்றுக்கு தகுதியானார்கள்.
இந்த நிலையில் தற்போது இரண்டாம் சுற்று முடிவடைந்துள்ளது. இரண்டாம் சுற்றில் 102 காளைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில் 20 காளைகள் பிடிபட்டன. இரண்டாம் சுற்றில் 9 மாடு புடி வீரர்கள், 4 பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர் ஒருவர் என மொத்தம் 14 பேர் காயமடைந்துள்ளனர். இரண்டாம் சுற்றின் முடிவில் 4 பேர் இறுதி சுற்றுக்கு தகுதியாகியுள்ளனர்.