மதுரை : காணாமல் போன 7 வயது சிறுவன் சடலமாக மீட்பு!
மதுரை மாவட்டம் திருமங்கலம் நடுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவருக்கு சண்முகவேல் (7) மற்றும் ராஜவேல் 2 1/2 ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே ராஜசேகர் தனது குடும்பத்துடன் கடந்த வியாழக்கிழமை அன்று பேரையூர் அருகே உள்ள S.மேலப்பட்டி கிராமத்திற்கு கோவில் திருவிழாவிற்கு வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி மாலை சண்முகவேல் தனது பாட்டி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென காணாமல் போயுள்ளார்.
இதையடுத்து காணாமல் போன சிறுவனை பெற்றோர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால் 14ஆம் தேதி பேரையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அதே பகுதியில் நின்று கொண்டிருந்த காரில் சிறுவன் சடலமாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார் சிறுவன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது காருக்குள் சென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டாரா? என்று பல்வேறு கோணத்தில் பேரையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.