மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் - கோலாகலமாக தொடங்கியது!
உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும் கோயிலாகும். இதில் முக்கிய விழாவான சித்திரை திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று காலை சாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் முன்னே எழுந்தருளிய நிலையில் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தின் முன்பாக சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனா்.
கொடியேற்றத்தை முன்னிட்டு கம்பத்தடி மண்டபம் முழுவதும் பல்வேறு வண்ண மலர்களாலும், மக்காச்சோளம் உள்ளிட்ட நவதானியங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அப்போது வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின் தங்க கொடி மரத்தில் பிரமாண்டமான மாலை ஏற்றப்பட்டு மலர்கள் தூவ கொடிகம்பத்திற்கு பூஜிக்கப்பட்ட நீரினை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்ற விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சியம்மனும் கோயில் யானை மற்றும் பசு முன்னே செல்ல மேளாதாள மங்கள வாத்தியங்கள் முழங்க 3 முறை வலம் வந்து பின்னர் மடப்பள்ளியில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளினர். இன்று தொடங்கியுள்ள சித்திரை திருவிழாவில் மீனாட்சி-சுந்தரேசுவரர், காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர்.
இன்று முதல் 12 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக வரும் மே 6 ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், மே 7 ஆம் தேதி திக்கு விஜயமும், மே 8 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், மே 9 ஆம் தேதி தேரோட்டமும், மே 10 ஆம் தேதியுடன் தீர்த்தவரியுடன் விழா நிறைவுபெறுகிறது.
இதன் தொடர்ச்சியாக மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வரும் மே 12 ஆம் தேதி அதிகாலை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.