For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“மதுரை காமராஜர் பல்கலைக்கு நிதியும், நீதியும் வேண்டும்” - முதலமைச்சர் #MKStalin-க்கு எம்பி சு.வெங்கடேசன் கடிதம்!

12:47 PM Sep 18, 2024 IST | Web Editor
“மதுரை காமராஜர் பல்கலைக்கு நிதியும்  நீதியும் வேண்டும்”   முதலமைச்சர்  mkstalin க்கு எம்பி சு வெங்கடேசன் கடிதம்
Advertisement

நிதி நெருக்கடியில் தவிக்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக ரூ.100 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க கல்வி நிறுவனங்களுள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் ஒன்று. கடந்த 1966-ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, 57 ஆண்டுகளாகத் தென் மாவட்டங்களின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது. அண்மைக் காலமாக போதுமான நிதி வசதியின்றி பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் தருவதற்கு இயலாமல் தள்ளாடி வருகிறது. இதனால் அவ்வப்போது போராட்டங்களும் வெடித்து வருகின்றன. இந்நிலையில் இந்த பிரச்னைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்வு காண வேண்டும் என எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசால் ரூ.58 கோடி நிதி வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு வெறும் ரூ.8 கோடியே வழங்கப்பட்டுள்ளது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, நீதியையும், நிதியையும் பெற்றுத் தரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய பல்கலைக்கழகம் என்பது மட்டுமல்ல. தென்தமிழ்நாட்டின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். இந்த பல்கலைக்கழகத்தின் வரம்பிற்குட்பட்ட 117 கல்லூரிகளில், ஏறத்தாழ 1,50,000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பல்கலைக்கழகத்தின் சீரிய செயல்பாட்டிற்காக 2022 ஆம் ஆண்டு யுஜிசி A+ என்ற உயர்தர சான்றிதழ் வழங்கியுள்ளது. எனவே, இன்றளவும் தென் தமிழகத்தின் உயர் கல்வி முன்னேற்றத்திற்கு காமராஜர் பல்கலைக்கழகத்தின் பங்கு அளப்பரியது.

ஆனால் சமீப காலமாக, இந்த பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாகச் சூழல் பல்கலைகழகத்தின் நிதி பற்றாக்குறையால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் தங்களது சொந்த மற்றும் அரசு நிதி ஆதாரங்களை கொண்டு நடத்தப்படுகின்றன. தொலைதூரக் கல்வி இயக்கத்தின் வருவாய் வீழ்ச்சி மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளின் வளர்ச்சியால் ஏற்பட்ட தேர்வு கட்டண இழப்பின் காரணமாக பல்கலைக்கழகத்தின் சொந்த நிதி ஆதாரங்கள் வெகுவாக பலவீனமடைந்துள்ளன.

பல்கலைக்கழகத்தில் 159 ஆசிரியர்களும் (காலிப்பணியிடம் 181 - 53%) 231 நிர்வாக அலுவலர்களும் (காலிப்பணியிடம் 577 - 64%) பணியாற்றி வருகின்றனர். இது தவிர, 1181 க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் மற்றும் 293 தற்காலிக பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கான நிதி பல்கலைக்கழகத்தின் சொந்த நிதியிலிருந்து மட்டுமே பெறப்படுவதால், பல்கலைக்கழகத்தின் நிதி பற்றாக்குறை படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. இந்த நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு கடந்த வருடம் வழங்கப்பட்ட ரூ.58 கோடி மாநில அரசு நிதி, நடப்பு நிதியாண்டில் வெறும் ரூ.8 கோடியாக குறைக்கப்பட்டிருப்பது நிதி பிரச்சினையை தீவிரமடையச் செய்துள்ளது.

அரசு நிதி சுமார் ரூ.50 கோடி அளவிற்கு வெட்டப்பட்டுள்ளதின் காரணமாக, இந்த கல்வியாண்டில் சுமார் 7 மாதங்களுக்கு மட்டுமே சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதுதவிர நிதி நெருக்கடியினால் உள்கட்டமைப்பு பற்றாக்குறை மற்றும் காலிப்பணியிடங்கள் போன்றவை பல்கலைக்கழகத்தின் ஆய்வு மற்றும் கல்விப் பணிகளையும், நிர்வாகப் பணிகளையும் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளன.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி பல்கலைக்கழக ஆசிரியர்கள் 5வது நாளாக கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சூழலில், காமராஜர் பல்கலைக்கழகத்திற்கான நிதி நெருக்கடியை சீர்செய்ய தமிழ்நாடு அரசின் நேரடி தலையீடு மிக அவசியம் என கருதுகிறேன். இந்தப் பின்னணியில், கீழ்க்கண்ட கோரிக்கைகளை தங்களது பரிசீலனைக்கு வைக்க விரும்புகிறேன்.

பரிசீலனைக்கு வைக்க விரும்புகிறேன்

1. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஆண்டு நிதித் தேவையை தமிழக அரசு ஏற்றிருப்பது போல, இந்த ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக ரூ. 100 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டுகிறேன்.

2 தஞ்சை பல்கலைக்கழக ஓய்வூதியதாரர்களுக்கான நிதியை தமிழக அரசு ஏற்றுள்ளது போல, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஓய்வூதிய நிதியை அரசு ஏற்க வழிவகை செய்ய வேண்டும்.

மேற்கூறிய கோரிக்கைகளை நிறைவேற்றி லட்சம் மாணவர்களும், பொதுமக்களும் பயன்பெறும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாகச் சூழலை காத்திட வேண்டுகிறேன்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் சு.வெங்கடேசன் எம்பி குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement