நிர்மலா தேவிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு!
பேராசிரியர் நிர்மலா தேவிக்கு இடைக்கால ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை,
தவறாக வழிநடத்திய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பேராசிரியர் நிர்மலா
தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் ஏப்ரல் 30 ம் தேதி தீர்ப்பளித்துள்ளது. மேலும், ரூ.2.45 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் பேராசிரியர் நிர்மலா தேவி அடைக்கப்பட்டார்.
முன்னதாக இந்த வழக்கு ஏப்ரல் 29 ம் தேதி விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கில்
குற்றம் சாட்டப்பட்டிருந்த மதுரை காமராஜர் பல்கலை உதவி பேராசிரியர்
முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்து நீதிமன்றம்
உத்தரவிட்டது. இ ந்த நிலையில் மதுரை மத்திய சிறையில் உள்ள பேராசிரியர் நிர்மலா தேவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், கல்லூரி மாணவிகளை பாலியல்ரீதியாக தவறாக வழிநடத்திய வழக்கில்
ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் எனக்கு விதித்த 10 ஆண்டுகள் சிறை தண்டனை
உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவேன்.
இந்த வழக்கில் 2 வது, 3-வது குற்றவாளிகளான மதுரை காமராஜர் பல்கலை உதவி
பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்து
நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி விடுதலை
செய்து உள்ளது. மதுரை காமராஜர் பல்கலை உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோருக்காக தான், நான் மாணவிகளிடம் செல்போனில் பேசினேன்.
குற்றவாளிகளை விடுதலை செய்த பிறகு, என்னை பல பிரிவுகளில் தண்டித்து 10
ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது ஏற்புடையதல்ல. எனவே இந்த வழக்கில், எனக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு உயர்நீதிமன்ற கிளையில், நீதிபதி ராமகிருஷ்ணன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தற்போதைய நிலையில் இடைக்கால ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் முதல் வாரம் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.