மதுரை சித்திரை திருவிழா: ஏப்.23ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்!
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது.
மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று மீனாட்சி அம்மன் கோயில். மீனாட்சி அம்மன் கோயிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று சித்திரை திருவிழா. மதுரை மட்டுமல்லாமல் தென் மாவட்ட மக்களின் மிக முக்கிய கொண்டாட்டங்களில் ஒன்று சித்திரை திருவிழா. இதில் முக்கிய நிகழ்ச்சிகளாக பார்க்கப்படும் மீனாட்சிக் திருக்கல்யாணமும், அழகரின் வைகை ஆற்று வைபவமும் மதுரை மக்களின் வாழ்வியலோடு கலந்துவிட்ட ஒன்று. ஒரு மாதம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரே திருவிழா சித்திரை திருவிழா தான்.
இதையும் படியுங்கள் : முடிச்சூரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற மாயன கொள்ளை!
இந்த ஆண்டு கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழாவிழாவிற்கான அறிவிப்பை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. வாஸ்து சாந்தியுடன் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. 20 ஆம் தேதி மீனாட்சி அம்மன் திக் விஜயமும், ஏப்ரல் 21 ஆம் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. ஏப். 22 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். இந்த விழாக்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசணம் செய்வது வழக்கமாக உள்ளது.
இதையடுத்து, சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிகாலை 5.51 மணி முதல் 6.10 மணிக்குள்ளாக தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள உள்ளார். வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்விற்காக கள்ளழகர் ஏப்ரல் 21 ஆம் தேதி மாலை 6:25 மணி அளவில் அழகர் மலையிலிருந்து புறப்படுகிறார்.
ஏப்ரல் 24 ஆம் தேதி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், அதனைதொடர்ந்து விடிய விடிய தசாவதார நிகழ்வும் நடைபெற உள்ளது. பின்னர், சித்திரைத் திருவிழாக்கள் நிறைவு பெறுவதை எடுத்து ஏப்ரல் 27ஆம் தேதி கள்ளழகர் அழகர் மலைக்கு திரும்புகிறார்.