மதுரை சித்திரை திருவிழா - மீனாட்சியம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம் விழா!
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரைத் திருவிழா கடந்த எப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த நிலையில் கோயிலில் இன்று பட்டாபிஷேகமும், மே 7 ம் தேதி திக்கு விஜயம், 8 ம் தேதி திருக்கல்யாணம், 9 ம் தேதி திருத்தோரோட்டம் உள்ளிட்ட முக்கிய
திருவிழாக்கள் நடைபெற உள்ளது.
இதனிடையே சித்திரை திருவிழாவின் 8 ஆம் நாளான இன்று காலை சுவாமியும், அம்மனும் எழுந்தருளும் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
முன்னதாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் எழுந்தருளிய சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாரதனைகள் காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமியும், அம்மனும் திருக்கோவிலில் இருந்து புறப்பட்டு கீழச்சித்திரை வீதி, தெற்கு ஆவணி மூல வீதி, திண்டுக்கல் ரோடு, மேலமாசி வீதி வழியாக திருவீதி உலா வந்து திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதினம் கட்டுசெட்டி
மண்டபப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இதனை தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு மேலகோபுர தெரு, மேல சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி வழியாக திருக்கோவிலை வந்தடைவர். வீதி உலாவின் போது ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமியையும் அம்மனையும் தரிசனம் செய்தனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று மாலை 7.35 மணியிலிருந்து 7.59 மணிக்குள் மீனாட்சியம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. அதன்படி, இன்று முதல் 4 மாதங்களுக்கு மதுரையின் ஆட்சிப் பொறுப்பை மீனாட்சி அம்மன் ஏற்றுக்கொள்கிறார் என்பது ஐதீகம்.