மதுரை சித்திரைத் திருவிழா 2025 - முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முக்கிய ஆலோசனை!
மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று மீனாட்சி அம்மன் கோயில். மீனாட்சி அம்மன் கோயிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று சித்திரை திருவிழா. மதுரை மட்டுமல்லாமல் தென் மாவட்ட மக்களின் மிக முக்கிய கொண்டாட்டங்களில் ஒன்று சித்திரை திருவிழா. இதில் முக்கிய நிகழ்ச்சிகளாக பார்க்கப்படும் மீனாட்சிக் திருக்கல்யாணமும், அழகரின் வைகை ஆற்று வைபவமும் மதுரை மக்களின் வாழ்வியலோடு கலந்துவிட்ட ஒன்று. ஒரு மாதம் முழுவதும் தயாராகி அதிக நாட்கள் கொண்டாடப்படும் ஒரே திருவிழா சித்திரை திருவிழா தான்.
இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிழாவிற்கான அறிவிப்பை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி மே 12 ஆம் தேதி காலை 5.45 மணியிலிருந்து 6.10 மணிக்குள்ளாக சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார் என அழகர் கோவில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
மதுரை சித்திரை திருவிழா - முக்கியத் தேதிகள் :
- சித்திரைத் திருவிழா மே 8 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது
- மே 10 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 6.15 மணிக்குள்ளாக அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர் மதுரை நோக்கி புறப்படுகிறார்
- மே 11 ஆம் தேதி மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெறுகிறது
- மே 12 ஆம் தேதி காலை 5.45 மணியிலிருந்து 6.10 மணிக்குள்ளாக சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார்
- மே 12 ஆம் தேதி ராமராயர் மண்டபத்தில் கள்ளழகருக்கு தண்ணீர் பீச்சும் வைபவம் நடைபெறுகிறது
- மே 13ஆம் தேதி தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் மண்டுக முனிவர்களுக்கு சாப விமோசனம் அளிக்கிறார்
- மே 13 இரவு முதல் 14 அதிகாலை வரை ராமராயர் மண்டபத்தில் கள்ளழகருக்கு தசாவதார கோலங்களில் காட்சியளிக்கிறார்
- மே 14 ஆம் தேதி தல்லாகுளம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் கள்ளழகர் பூப்பல்லத்தில் எழுந்தருளுகிறார்
- மே 15 ஆம் தேதி அதிகாலை கள்ளழகர் அழகர் மலையை நோக்கி புறப்படுகிறார்
- மே 16 ஆம் தேதி காலை 10 மணி முதல் 10.20 மணிக்குள்ளாக கள்ளழகர் அழகர் மலைக்கு வந்தடைகிறார்
இந்த நிலையில் மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி, தீயணைப்புத்துறை மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்ததாவது..
” கள்ளழகர் வைகை ஆற்றை நோக்கி வரும் போது கோரிப்பாளையம் பகுதியில் 10 லட்சம் மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோரிப்பாளையம் - நெல்பேட்டை இடையே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது, மேம்பால பணிகளால் மக்கள் பாதிக்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்படும். கட்டப்பட்டு வரும் மேம்பால தூண்களை சுற்றி பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட உத்தரவிட்டுள்ளோம். கள்ளழகர் வரும் பாதையான அழகர் கோயிலில் இருந்து வண்டியூர் வரை ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு குடிநீர் தொட்டி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது” என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்தார்.