ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வண்டியூர் கண்மாய் நிலங்களை மீட்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!
மதுரையைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் மதுரை மாநாரட்சி எல்லைக்குட்பட்ட வண்டியூர் கண்மாய் பகுதியில் உள்ள பல ஏக்கர் நிலங்களை
கடந்த 1960ம் ஆண்டு முதல் விவசாயம் செய்து வருவதாக கூறியும், அதற்கு தான்
அரசாங்கத்திற்கு வரி செலுத்தி வருவதாகவும், சம்பந்தப்பட்ட இடத்திற்கு
தனக்கு பட்டா வழங்ககோரி அரசு அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாகவும்,
தனக்கு பட்டா கோரி மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு நிலுவையில்
இறந்துவிட்டார்.
அவர் இறந்துவிட்ட பிறகு, அவரது மருமகள் மற்றும் பேரன்கள் தொடர்ந்து மேற்படி இடத்தில் இருப்பதாக கூறி மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, அதில் பட்டா வாங்குவதற்கு உத்தரவு பெற்றனர். இதற்கு எதிராக அரசு தரப்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே பட்டா பெற்றபின் அந்த இடங்களை பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்து விட்டனர். இதனை எதிர்த்து மாவட்ட ஆட்சியர் தரப்பில் மேல்முறையீடு மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் G.R. சுவாமிநாதன் மற்றும் B.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் இரா.பாஸ்கரன் ஆஜராகி, சம்பந்தப்பட்ட இடம் நீர்நிலை புறம்போக்கு ஆவணங்களில் உள்ளதை சுட்டிக்காட்டி பதில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை பதிவு செய்த நீதிபதிகள் சம்பந்தப்பட்ட இடம் நீர்நிலை புறம்போக்கு தான் என ஆவணங்களை சுட்டிக்காட்டி, அந்த இடங்களை அரசு மீண்டும் சுவாதீனம் எடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.