பாதுகாப்பு கோரி திருச்சி சிவா தாக்கல் செய்த மனு - காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
காவல்துறை பாதுகாப்புக் கோரி திருச்சி சூர்யா மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், கோரிக்கை குறித்து தமிழ்நாடு காவல்துறை மற்றும் திருச்சி காவல்துறை தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக, திருச்சி சூர்யா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பு இன்று (நவ. 7) விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிக்குமார் ஆஜராகி, “தற்போதைய சூழலில் சூர்யாவுக்கு போலீசார் பாதுகாப்பு தேவையில்லை. அனைவருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது. மனு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம்
வேண்டும்” என தெரிவித்தார்.
இதே போல் சாட்டை துரைமுருகன் தரப்பில், சூர்யா மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், “நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரையும், நாம் தமிழர் கட்சியினர் பற்றி அவதூறான செய்திகளை திருச்சி சூர்யா பரப்பி வருகிறார். இது குறித்து சட்டரீதியாக நாங்கள் சந்திக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்நிலையில் எங்களை குற்றம் சாட்டி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டது.
சாட்டை துரைமுருகன் தரப்பு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரர் கோரிக்கை குறித்து தமிழ்நாடு காவல்துறை மற்றும் திருச்சி காவல்துறை தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.