மதுரை விமான நிலைய விரிவாக்கம் - சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற இடைக்காலத் தடை!
மதுரை விமான நிலைய விரிவாக்க விவகாரத்தில் சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு பகுதியை சேர்ந்த மலைராஜன், பெரியசாமி, சந்திரா உள்ளிட்ட 130 பேர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தனர். அதில், "சின்ன உடைப்பு பகுதியில் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக 2009ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இழப்பீடு முடிவு செய்யப்பட்டு, அனைத்து நண்பர்களுக்கும் இழப்பீடும் வழங்கப்பட்டு விட்டது.
ஆனால் மறு குடியமர்வு மற்றும் மறுவாழ்வு தொடர்பாக எவ்விதமான முறையான திட்டமும் எடுக்கப்படவில்லை. தொழிலக பயன்பாட்டிற்காக நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் போது, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு ஆகியவற்றை செய்து தர வேண்டும். 2013 ஆம் ஆண்டு கொணரப்பட்ட விதியும், இதனை உறுதி செய்கிறது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆனால் இப்பகுதி மக்களை வெளியேற்றும் நோக்கில் கனரக இயந்திரங்களும், காவல்துறையினரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே மறுவாழ்வு, மறுகுடியமர்வு வசதிகளை செய்து தராமல், 1997 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் விதிகளை அமல்படுத்துவது செல்லாது என உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியே கிளாட் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், “தொழிலக பயன்பாட்டிற்கான நிலம் கையகப்படுத்துதல் விதிகளின் படி மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வு வசதிகளை செய்து தர வேண்டும்” என வாதிடப்பட்டது.
அரசுத்தரப்பில், "2013ஆம் ஆண்டே அந்த விதி நடைமுறைக்கு வந்தது. ஆனால் அதற்கு முன்பாகவே நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது. இழப்பீட்டுத் தொகையும் பெரும்பாலானவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது" என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், "வழக்கு தொடர்பாக தமிழக வருவாய் துறையின் முதன்மைச் செயலர், நில நிர்வாகப் பிரிவின் இயக்குனர், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அதுவரை அப்பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்ற இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டனர்.